இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடருக்குப் பிறகு கேஎல் ராகுல் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மட்டுமே அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டை விட்டு விலகி ஓய்வு பெறுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனிடம் கே எல் ராகுல் சில எதார்த்தமான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருக்கும் கேஎல் ராகுல் t20 அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது தலைமையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் கேஎல் ராகுல் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்தது என்றே சொல்லலாம்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அணைக்கின் பீட்டர்சன் கேஎல் ராகுலிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து உங்கள் முடிவு என்ன என்று ராகுலிடம் கேட்டபோது, கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது என்பது எனக்கு அவ்வளவு கடினமான முடிவாக இருக்கும் என்று தெரியவில்லை, மேலும் கிரிக்கெட்டை விடவும் வாழ்க்கை இருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்று அவர் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஓய்வு பெறுவது என்பது எனக்கு அவ்வளவு பெரிய கஷ்டமாக இருக்கும் என்று தோன்றவில்லை. உங்களுக்கான நேரம் எப்போது வருகிறதோ அப்போது அந்த முடிவு தானாக எடுக்கப்படும். அதனால் தற்போது அது குறித்து யோசிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. எனக்கு அது இன்னும் சற்று தொலைவில் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதை விட கடினமான வலி என்று கேட்டால் நான் காயமடைந்த நிலையை சொல்வேன்.
நான் நிறைய போட்டிகளில் காயமடைந்து வெளியேறி இருக்கிறேன். கிரிக்கெட் உங்களுக்கு போதுமான பணம் வழங்கி இருக்கிறது. எனவே அதை வைத்து உங்களால் உயிர் வாழ முடியும். நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலியும் கூட. இதை வைத்து நீங்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் உயிர் வாழ முடியும். எனவே தற்போது இருப்பதை வைத்து அனுபவித்து விட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். நான் அவ்வளவு முக்கியமானவன் இல்லை என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். நான் இல்லை என்றாலும் நம் நாட்டு கிரிக்கெட் தொடரும், உலக கிரிக்கெட் தொடரும். எனக்கு முதல் குழந்தை பிறந்ததில் இருந்து நான் என்னுடைய வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு மாதிரி இருக்கிறது, இப்போது நான் அப்படித்தான் இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.






