ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் விராட் கோலி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஷேன் வாட்சன் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரை பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறையும் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. பெங்களூர் அணியில் உள்ள அனைவரும் தங்களின் திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி அணியினை வெற்றி பெற வைத்து வருகின்றனர். அந்த அணியின் நட்சத்திர ஜாம்பவான் விராட் கோலி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைசி இரண்டு போட்டிகளில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
ஆரம்பத்திலேயே ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்து தனது விக்கட்டை இரு போட்டிகளிலும் பறி கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பிப்பார் என்று தாங்கள் நம்புவதாக கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாட்சன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஒவ்வொரு அணியும் விராட் கோலிக்கு எதிராக திட்டங்கள் தீட்டி வருகின்றனர். ஏனென்றால் அவர் உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்து வருகிறார். அவரை வீழ்த்துவது குறித்து ஒவ்வொரு அணியும் திட்டமிடுகிறது. ஆனால் இதில் உள்ள சவால் என்னவென்றால் அந்தத் திட்டங்களை எப்படி முறியடிப்பது என்று விராட் கோலிக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த போட்டியில் அவர் விளையாடியது போலவே இந்த முறையும் அவர் ஒரு அதிரடி ஷாட்டை விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும் விராட் கோலி மிகவும் கட்டுப்பாடு உடையவர் என்பதால் அந்த தவறை செய்வதற்கு வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே அமையும். அவர் ஒரு மிகச்சிறந்த நபராக திகழ வேண்டும் என்கிற அவரது தாக்கமும் ஒவ்வொரு பந்தின் மீது அவர் காட்டும் ஆர்வமும் அவரை இன்னும் பிரகாசிக்க வைக்கின்றன. எனவே நாங்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.






