தினமும் வேலை முடிந்து 10 கி.மீ ஒடும் சிறுவன் குறித்து பேசியுள்ள கெவின் பீட்டர்சன்

0
45
Kevin Pietersen and Delhi boy

திரைப்பட உருவாக்குனரான வினோத் கப்ரி, விநோதமான காட்சி ஒன்றை டெல்லியின் நொய்டா நகர சாலையில் நள்ளிரவில் காண, அதைத் தன் அலைபேசியில் பதிவு செய்கிறார்.

என்னவென்றால், அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு இளைஞன் தோள்களில் பையை மாட்டிக்கொண்டு சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறான்.

ஏதோ வித்தியாசமாகவும் வியப்பாகவும் தோன்றவே, அந்த இளைஞனைத் தன் காரில் பின்தொடர்ந்து சென்று விசாரித்து அதையும் படம் பிடிக்கிறார் வினோத் கப்ரி.

முதலில் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞனிடம் தன் காரில் ஏறிக்கொண்டால் போகுமிடத்தில் விட்டுவிடுவதாகக் கப்ரி கூற, அவன் அதை நாகரீகமாய் மறுத்து விடுகிறான். மேலும், ஆர்வம் அதிகமாகி கப்ரி அவன் வேலைக்குறித்து விசாரிக்க, அவன் மெக்டொனால்டில் வேலை செய்வதாகவும் தற்போது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறான்.

‘வேலை முடித்து வீட்டிற்குப் போகிறவன் ஏன் வண்டியில் வர மறுக்கிறான்?’ என்று குழப்பம் அதிகமாக, கப்ரி காரணத்தைத் தெரிந்துகொள்ள மீண்டும் விசாரிக்கிறார். அப்பொழுதுதான் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகக்கூடிய அளவிற்கான காரணத்தைப் பதிலாகச் சொல்கிறான் அந்த இளைஞன். தனக்கு 19 வயதாவதாகவும், தான் இந்திய இராணுவத்தில் சேர்வதற்காக வீடுதிரும்பும் இந்த நேரத்தை ஓட்டத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதாகச் சொல்கிறான்.

சந்தேகத்திலிருந்து வியப்புக்கு மாறிய கப்ரியால் மேற்கொண்டு அவன் பெயர், போகுமிடம், குடும்பம் குறித்துக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஆகவே, தொடர்ந்து விசாரிக்கிறார். அதற்கான அவன் பதில்கள் கப்ரியை அப்படியே நெகிழ்ந்துபோக வைத்து விடுகிறது.

தன் பெயர் பிரதீப் மெக்ரா என்றும், தன் வீடு இங்கிருந்து பத்து கி.மீ தொலைவில் இருப்பதாகவும், சொந்த ஊர் உத்ரகாண்ட்டின் அல்மேரா எனவும் தெரிவிக்கிறான். கப்ரி அவனுக்கு ஏதாவது உதவி செய்தே ஆகவேண்டுமென்று தன்னுடன் இரவு உணவு உண்ணுமாறு அழைக்க, பிரதீப் மெக்ராவோ தன் பதில்களால் கப்ரியை இன்னுமின்னும் நெகிழ்த்துகிறான்.

தன் மூத்த சகோதரனுக்குத் தான் சென்று சமைக்க வேண்டும் என்றும், தன் தாய் நோய்வாய்ப்பட்டு மருத்துமனையில் இருப்பதாகவும் சொல்கிறான். கப்ரி கடைசியாய் ஆரம்பித்த இடத்திற்கே வந்து காரில் ஏறிக்கொள்ள கேட்க, பிரதீப்போ இந்திய இராணுவத்தில் சேருவதற்கான தன் வழக்கமான தினசரி பயிற்சி பாதிக்கப்படும் எனக்கூறி மறுக்க, கப்ரி அவனை வாழ்த்தி, “நீ இணையத்தில் வைரலாகப் போகிறாய்” என்று கூறி கிளம்புகிறார்.

அதேபோல் கப்ரி பகிர்ந்த இந்த நள்ளிரவு ஓட்ட இந்திய இளைஞனின் காணொளி ட்விட்டரில் வைரலாக, அந்த இளைஞனை வியந்து வாழ்த்தி, அந்த ட்வீட்டை பகிர்ந்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் பிரபல முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்!