ஒரு போட்டியில் தோற்றது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? ரோகித் சர்மா தான் பெஸ்ட் கேப்டன் என வரலாறு சொல்கிறது! – ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் கருத்து!

0
1230

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்திய அணிக்கும் சிறப்பாக கேப்டன் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். அவர் அடுத்த சில வருடங்களுக்கு தனது கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோல்வியை தழுவிய பிறகு ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு இதுவரை காணாத அளவிற்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து பைனலிலும் ரோகித் சர்மா தோல்வியை தழுவியது இல்லை. தனது கிரிக்கெட் கேரியரில் முதல் முறையாக பைனலில் தோல்வியை தழுவினார்.

- Advertisement -

மேலும் ஃபைனலில் ரோகித் சர்மா எடுத்த சில முடிவுகள் பல வகைகளில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இனியும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டுமா? அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு தேவையா? ஓய்வு முடிவு அறிவிக்க சொல்லுங்கள்! என பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். ஆனால் பிசிசிஐ ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பை மாற்றும் முடிவில் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக தொடர வேண்டும், அவர் நன்றாகவே செயல்பட்டு வருகிறார் என சமீபத்திய பேட்டியில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியுள்ளார்.

“ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அதில் துளியும் சந்தேகமில்லை. அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் வீரர்களை கையாளும் விதம் நன்றாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக செயல்பட்டுள்ள அவரது ஐபிஎல் ரெக்கார்டை பாருங்கள். கேப்டன் பொறுப்பில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று தெரியும்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி பைனல் வரை இரண்டாவது முறையாக வந்ததற்கு அவரும் ஒரு காரணம். பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் அவரது அணுகுமுறை சிறப்பாகவே இருக்கிறது. ஒரு போட்டியை வெல்லவில்லை என்பதற்காக அவர் அணியை வழிநடத்தக் கூடாது என்று சொல்லுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். தொடர்ந்து இந்திய அணியை அவர் வழிநடத்த வேண்டும். அடுத்த சில வருடங்களுக்கு கேப்டன் பொறுப்பில் அவர் தொடர வேண்டும். தற்போது இருக்கும் இந்திய அணியில் அவர்தான் சிறந்த கேப்டன்.” என்றார் மைக்கேல் கிளார்க்.