இந்திய அணியில் உள்ள வீரர்கள் எந்தெந்த பாலிவுட் நட்சத்திரங்கள் போன்றவர்கள் என்பது குறித்து இந்திய டி20 அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக இவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தது. இவரும் அந்த வாய்ப்பை ஓரளவுக்கு நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
இந்திய ஏ அணியில் வாய்ப்பில்லை
தற்போது இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் அபிஷேக் ஷர்மா ஆரம்பித்து திலக் வர்மா, ரியான் பராக் என எல்லா நட்சத்திர வீரர்களும் இடம்பெற்று விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த அணியில் விக்கெட் கீப்பராக இசான் கிஷான் மற்றும் பிரப்ஸிம்ரன் சிங் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜிதேஷ் சர்மாவை முழுக்க முழுக்க டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமே இந்தியத் தேர்வுக்குழுவும் இந்திய அணி நிர்வாகமும் பயன்படுத்த நினைக்கிறது. அந்த அளவிற்கு அவரை டி20 ஸ்பெசலிஸ்ட் வீரராக பார்க்கிறார்கள்.
இவர்தான் அமிதாப்
இந்த நிலையில் பேசி இருக்கும் ஜிதேஷ் சர்மா கூறும் பொழுது “எங்கள் அணியின் அமிதாபச்சன் என்றால் அது பும்ராதான். அவர் தற்போது இந்திய அணியில் எங்களுக்கு எல்லாம் மிகவும் சீனியர். அவர் மீது நாங்கள் அனைவருமே பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். எங்களுக்கு வெற்றி தேவைப்படும் பொழுதெல்லாம் நாங்கள் அவரை ஆட்டத்துக்குள் கொண்டு வருவோம். அந்த அளவிற்கு அவர் முக்கியமானவர்”
இதையும் படிங்க : ஷமி பாய்க்காக எங்க பவுலர்களை விட்டுத் தர முடியாது.. பின்னால் இருக்கும் காரணம் வேற – சுப்மன் கில் பேச்சு
“அதே சமயத்தில் தபாங் படத்தில் வருவது போல அதிரடியான சல்மான் கான் கதாபாத்திரம் என்றால் அது எங்கள் டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் பொழுது அவரைத்தான் சல்மான் கான் இடத்திற்கு தேர்ந்தெடுக்க முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.






