இந்திய அணி 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும், இதற்கடுத்து 2023 ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்றிருக்கிறது. இதற்கு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜெய் ஷா பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரின் மூலமாக மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி வருகிறது. இதன் காரணமாக உலகக்கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தையும் செலுத்துகிறது. மேலும் உலகத்தரமான வீரர்கள் பலர் இருந்தும் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாதது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. இப்படியான சூழலில்தான் ரோகித் சர்மா தலைமையிலான அணி கோப்பையை வென்றது மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக மாறுகிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா பேசும் பொழுது “இந்த வரலாற்று வெற்றிக்காக டீம் இந்தியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த வெற்றியை இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன்.கடந்த ஒரு வருடத்தில் இது எங்களுக்கு மூன்றாவது இறுதிப் போட்டியாக இருந்தது.
நாங்கள் கடந்த ஆண்டு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றோம். இதற்கு அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் தோற்றோம். நான் அந்த நேரத்தில் நாங்கள் நிச்சயம் அடுத்து உலகக் கோப்பையை வென்று உயர்த்துவோம் என்று கூறி இருந்தேன். நான் கூறியபடி இந்திய அணி கோப்பையை வென்று இருக்கிறது.
மேலும் இந்த டி20 உலக கோப்பை இந்திய அணியின் வெற்றியில் கடைசி ஐந்து ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டது முக்கிய பங்கை கொண்டு இருக்கிறது. இதற்காக சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு எனது மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு தொடர்களிலும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் அனைவருக்கும் ஒரு முறை நன்றி” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : முடிந்த சகாப்தம்.. 2024 உலக கோப்பைக்கு பின்.. டி20I கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 9 வீரர்கள்
இந்திய வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்த ஜெய் ஷா அறிக்கையை பார்க்கும் பொழுது அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு தொடர்களுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்பது தெளிவாகிறது. தற்போது பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் சிறப்பாக இருக்கும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் தொடர்வார் என ஜெய் ஷா அறிவித்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.