ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிப்பது குறித்து, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேச்சுகள் நடந்து வந்தாலும், வெள்ளை நிற பந்து சர்வதேச போட்டிகளில் அது குறித்து எந்த ஒரு பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை, இருப்பினும், 2025 ஆசியக் கோப்பைக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் பும்ரா பரிசீலிக்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் கடைசி சர்வதேச தொடரான சாம்பியன்ஸ் டிராபி 2025, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் பும்ரா காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இப்போது, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர், ஆசியக் கோப்பைக்கு பும்ராவை தவிர்க்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
டெஸ்டில் முக்கியத்துவம்:
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கில் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், இந்தியா தங்கள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரை புத்துணர்ச்சியுடனும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகவும் வைத்திருக்க முனைப்பு காட்டுகிறது.
இது குறித்து வெளியான பிசிசிஐ தகவலின் படி, “இது ஒரு சிக்கலான முடிவாக இருக்கும், ஆனால் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார், மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் மிகவும் முக்கியமானவை. டி20 விஷயத்தில், அவர் ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடலாம். இது டி20 உலகக் கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்.”
பும்ரா தேவையா? இல்லையா?
“பும்ரா ஆசியக் கோப்பையில் விளையாடினால், இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றால், அவர் அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாட முடியாது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பும்ரா தேவையா, அல்லது ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் விளையாடி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த முடிவை அஜித் அகர்கர் மற்றும் கௌதம் கம்பீர் எடுக்க வேண்டும்.” என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணாவுக்கு நீங்க செஞ்ச அது நியாயமே இல்ல.. சிராஜுக்கு தங்க இதயம்.. நெகிழ வைத்துவிட்டார் – அஸ்வின் பேட்டி
ஆசியக் கோப்பை 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது, இந்திய அணி குரூப் A-வில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இடம்பெற்றுள்ளது. இந்த டி20 தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கு கவனம் செலுத்தும், இது இந்தியாவின் உள்ளூர் மண்ணில் நடைபெறும் புதிய சீசனின் முதல் தொடராகவும் இருக்கும்.






