இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களில் இருந்தும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் தன்னுடைய கேப்டன்கள் பற்றி கூறியிருக்கிறார்.
பும்ராவுக்கு முதன் முதலில் பெரிய மேடையாக ஐபிஎல் தொடர் அமைந்தது. இதில் அவர் ரோகித் சர்மா தலைமையின் கீழ் விளையாடினர். அடுத்து அவர் இந்திய அணிக்கு வந்த பொழுது தோனி அவரை வழிநடத்தக் கூடியவராக இருந்தார். இதற்கு அடுத்து விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடி, தற்போது மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறார்.
இன்று தனியார் நிகழ்ச்சியில் பேசி இருந்த பும்ரா ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் எதிர்க்கப்பட்ட பொழுது என்ன நடந்தது? ரசிகர்களின் பாராட்டை அவர் எப்படி எடுத்துக் கொள்கிறார்? தான் விளையாடிய கேப்டன்கள் என்ன மாதிரியானவர்கள் என்பது குறித்து நிறைய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்பொழுது “நான் இந்திய அணிக்கு அறிமுகமான பொழுது தோனி எனக்கு நிறைய பாதுகாப்பை கொடுத்தார். நான் அவர் தந்த பாதுகாப்பை உணர்ந்தேன். மேலும் அவர் தன் உள்ளுணர்வை நம்ப கூடியவர். அதே சமயத்தில் விராட் கோலி ஆற்றல், உள் உந்துதல் மற்றும் மிகவும் ஆர்வமானவர். ரோஹித் சர்மா பச்சாதாபம் பார்க்கக் கூடியவர். அவர் வீரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர். இவர்கள் ஒவ்வொருவருமே இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய செய்திருக்கிறார்கள்.
மேலும் நான் பந்துவீச்சின் போது ரோஹித் சர்மாவை கண்மூடித்தனமாக நம்புவேன். அவர் என்ன மாதிரி பீல்டிங் அமைப்பை வைத்தாலும் நான் அது குறித்து எதுவுமே கண்டு கொள்ள மாட்டேன். அவர் எப்படி செட் செய்து இருந்தாலும் நான் சென்று அப்படியே பந்து வீசுவேன். ஏனென்றால் பீல்ட் செட்டிங்கை செய்வது ரோகித் சர்மா. அது தவறாக இருக்காது என்று நான் நம்புவேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :
ஜஸ்பிரித் பும்ரா அரிதான பவுலிங் ஆக்சன் மற்றும் அரிதான திறமை கொண்ட வீரராக இருக்கின்ற காரணத்தினால், அவரை மிகவும் புத்திசாலித்தனமாக சரியான தொடர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்து ஆகஸ்ட் மாதம் முழுவதும் அவரை களத்தில் பார்க்க முடியாது. செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!






