21 வருட உழைப்பு.. ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை.. இந்திய அணி 477 ரன்கள் குவிப்பு

0
572
Anderson

இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம் அவர்களுக்கு நல்லதாக அமையவில்லை. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று என இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தொடரை இழந்திருந்தது.

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் குல்திப் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 218 ரன்கள் எடுத்து சுருண்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்தார்கள். ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் மூவரும் அரை சதம் அடித்தார்கள்.

இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 473 ரன்கள் எடுத்து எட்டு விக்கட்டுகளை இழந்திருந்தது. தளத்தில் குல்திப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் இருந்தார்கள். இந்திய அணி நேற்றைய நாளில் 255 ரன்கள் இங்கிலாந்து அணியை விட முன்னிலை பெற்று இருந்தது.

இந்த நிலையில் இன்று துவங்கி நடைபெற்ற ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இது ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 ஆவது விக்கெட்டாக அமைந்தது.

- Advertisement -

இதுவரை முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்திலும், சேன் வார்னே 708 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இருவருமே சுழல் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 700 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.

இதற்கு அடுத்து சிறிது நேரத்திலேயே பும்ரா 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி மொத்தம் 477 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தற்போது இந்திய அணி 259 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் இரண்டாவது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க : INDvsENG.. 147 வருட கிரிக்கெட் வரலாற்றில்.. நாளை முதல்முறையாக நடக்க போகும் கிரேட் சாதனை

ஜேம்ஸ் ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் 700 வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அங்கிருந்து 21 வருடங்கள் கடுமையான உழைப்பில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.