இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
இந்தியா தோற்ற இரண்டு போட்டிகளில் துவக்க ஜோடியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இதன் காரணமாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால் சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்!
இந்தத் தொடரில் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜெய்ஸ்வால் தைரியமான அணுகுமுறையை வெளிப்படுத்துவதற்காக மோதி ஒரு ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்துவிட்டார். அதில் அவரது தவறு என்பதை விட அவரது நோக்கம் சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில், அறிமுகப் போட்டியில் விட்டதற்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 51 பந்தில் 84 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த டி20 தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் அகேல் ஹுசைன் பந்துவீச்சில் ரன்கள் கொண்டு வருவது சிரமமாக இருந்தது. இதன் காரணமாக ஜெய்ஸ்வால் இடது கையிலிருந்து வலது கைக்கு மாறி ஸ்விட்ச் ஹிட் மூலம் அபாரமான ஒரு சிக்ஸர் அடித்தார். கிரிக்கெட்டில் தனக்கு மரபு ரீதியான ஷாட்கள் மட்டும் இல்லாமல் மாடர்ன் ஷாட்களும் வரும் என்று காட்டினார்.
A switch hit by Yashasvi Jaiswal for a six.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2023
He's a crazy talent…!! pic.twitter.com/OOBcfO2mrB
தற்பொழுது ஜெய்ஸ்வால் பேட்டிங் அணுகுமுறை பற்றியும், அவர் ஒவ்வொரு விதமாக விளையாடுவதற்கும் எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பது பற்றியும் ராபின் உத்தப்பா உடனான உரையாடலின்போது ஆகாஷ் சோப்ரா அருகில் இருந்து பார்த்த விஷயத்தை கூறினார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” அவர் இந்தியாவுக்காக இதுவரை மொத்தம் நாலு போட்டிகளில் மட்டும்தான் விளையாடி இருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் இரண்டு மேன் ஆப் த மேட்ச் விருது வாங்கியிருக்கிறார். அவரை நான் இந்தியாவின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக பார்க்கிறேன்.
மேலும் இந்திய அணிக்காக எதிர்காலத்தில் அவர் மூன்று வடிவிலான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். அவரிடம் மிகச் சிறந்த குணாதிசயம் இருக்கிறது. மேலும் அவர் அபாரமான கடின உழைப்பாளி. அவர் ஸ்டார் கிடையாது; இந்திய எதிர்கால கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்.
அவர் ஒருநாள் போல மதியத்தில் ஒரு மணிக்கு பயிற்சியை தொடங்கினார். அந்தப் பயிற்சியை இரவு 8 மணி வரை தொடர்ந்தார். அந்த நேரத்தில் அவர் வலையில் இந்த சுவிட்ச் ஹிட் முறையில் மட்டும் ஒரு 800 முறை பந்தையடித்து பயிற்சி செய்திருப்பார். ஆனால் வெளி உலகம் இறுதியாக அதற்கான ரிசல்ட்டை மட்டும்தான் பார்க்கிறது. ஆனால் ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு இடைவிடாத உழைப்பு தேவைப்படுகிறது!” என்று கூறியிருக்கிறார்!