இந்திய அணி தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி கடைசி நேர பேட்டிங் தவறுகளால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட்டது.
இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் சாகல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அணிக்கு பேட்டிங் செய்யும் வகையில் மொத்தம் ஏழு பேட்ஸ்மேன்கள் மட்டுமே கிடைத்தார்கள்.
எனவே ஒரு சுழற் பந்துவீச்சாளரை வெளியில் வைத்து, தற்பொழுது சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இடது கை இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” இந்திய அணியின் பார்வையிலிருந்து இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் மாற்றம் இருக்குமா? சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்திற்கு வரவேண்டும் என்பதும், சூரியகுமார் நான்காவது இடத்திற்கும், திலக் ஐந்தாவது இடத்திற்கும், ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்திற்கும் மாறி வரவேண்டும் என்பது ஒரு விவாத பொருளாக இருக்கிறது.
ஏன் அப்படி செய்ய வேண்டும்? எல்லாம் நல்லாதான் போகிறது. என் கருத்துப்படி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. வெளியில் ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே அமர்ந்திருக்கிறார். அது ஜெயஸ்வால். அவரை அணிக்குள் கொண்டு வந்தால் எங்கு ஆட வைப்பீர்கள்? மற்றவர்களை எங்கு ஆட வைப்பீர்கள்?
ஒரு போட்டிக்கு பிறகு நீங்கள் அணியை மாற்ற வேண்டுமா? ஆடுகளத்தில் புல் இருந்தால் நீங்கள் அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு விளையாடுவீர்கள். ஒருவேளை ஆடுகளம் அப்படி இல்லை என்றால், ஆடுகளத்தில் பந்து திரும்பும் வகையில் இருக்கிறது என்றால், நீங்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கைவிட்டு சுழற் பந்துவீச்சாளரை கொண்டு வருவீர்கள்.
இப்படியான மாற்றங்களை தவிர எதற்காக பிளேயிங் லெவனில் தேவையில்லாத மாற்றங்கள் செய்ய வேண்டும்? எனவே கடந்த போட்டியில் விளையாடிய அனைவரும் உடல் தகுதியோடு இருந்தால், இந்திய அணி மீண்டும் அதே அணியோடுதான் விளையாடும் என்று நான் நினைக்கிறேன். இது நடக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!






