“ஜடேஜா தன்னை நிரூபிக்க வேண்டும்” – மீண்டும் ஜடேஜாவிடம் மோதிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

0
89
Jadeja

இந்திய கிரிக்கெட்டில் ராக்ஸ்டார் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங் பௌலிங் மட்டுமல்லாது பீல்டிங்கிலும் அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி தரக்கூடியவர். அவரது இந்த முப்பரிமாண திறமையால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்!

சமீப ஆண்டுகளில் அவரது பேட்டிங் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது டெஸ்ட் கிரிக்கெட்டில். ஆனால் அதே சமயத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் பந்துவீச்சில் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை என்பதுதான் உண்மை. பந்துவீச்சில் அவரால் அணிக்கு எந்த ஒரு திருப்புமுனையையும் தரமுடியவில்லை.

- Advertisement -

இப்படியான சூழலில் இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜடேஜாவை போலவே லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் அக்சர் படேல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் ஒரு ஆட்டத்தை தன் பேட்டிங்கால் வென்று கொடுத்தார். டி20 தொடரிலும் சில முக்கிய கேமியோக்களை ஆடினார். பந்து வீச்சிலும் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அணிக்கு ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இவர் தற்போது ஜடேஜாவுக்கு ஒரு போட்டியாக வலைப்பந்து கிரிக்கெட்டில் மாறி வருகிறார்.

இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற, அக்ஷர் படேலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை வைத்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் போது ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில், ஜடேஜாவை ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக தான் பார்க்கவில்லை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியில் ஜடேஜாவின் இடம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசி உள்ளதாவது ” அவர் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டராக அணியில் இருக்கிறார் என்றால், அவர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு எந்த வகையில் மாற்றான வீரர் என்று பேட்டிங்கில் தேர்வாளர்களுக்கு நிரூபித்துக்காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அணிக்குள் தன் இடத்திற்கு ஏதோ தீவிரமான போட்டி வரப்போகிறது என்று ரவீந்திர ஜடேஜாவிற்கு தெரியும். அவர் இப்பொழுது பேட்டிங் ஆல்-ரவுண்டராக இருக்கிறாரா இல்லை பவுலிங் ஆல்-ரவுண்டராக இருக்கிறாரா என்று தேர்வாளர்களுக்கு அவர் காட்ட வேண்டும். அதைப் பொறுத்து அணியில் அவரது இடம் இருக்கும். அவர் பேட்டிங் ஆல்-ரவுண்டராக இருக்கிறார் என்றால் தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக பேட்டிங்கில் அவர் நிரூபிக்க வேண்டும். பவுலிங் ஆல்-ரவுண்டராக இருக்கிறார் என்றால், பந்துவீச்சில் அக்சர் படேலை விட சிறந்தவர் என்று நிரூபிக்க வேண்டும். அணி நிர்வாகத்திடம் இதை அவர் நிரூபிப்பதை பொறுத்து அவருக்கு அணியில் இடம் இருக்குமா இல்லையா என்று எதிர்காலத்தில் தெரியும்” என்று தனது கருத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்!

- Advertisement -