நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற ஜேக்கப் பெத்தேல் விராட் கோலி தன்னை எப்படி நல்ல பேட்ஸ்மேனாக மாற்றி இருக்கிறார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஆர் சி பி அணி நிர்வாகம் 2.60 கோடி ரூபாய் கொடுத்து இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேலை வாங்கியது. இவர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலம்
இங்கிலாந்து அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்து இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய திறமையை வைத்து எதிர்கால இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தில் இவர் மீது நம்பிக்கை வைத்து வாங்கியது. இரண்டு போட்டிகளில் விளையாடிய இவர் முதல் போட்டியில் தவறவிட்டாலும் கூட இரண்டாவது போட்டியில் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். இரண்டு போட்டியிலும் சேர்த்து 170 ஸ்ட்ரைக் ரேட்டில் 67 ரன்கள் எடுத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக நாடு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிதான் காரணம்
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 400 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 162 ரன்னுக்கு சுருட்டி 238 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் கீழ் வரிசையில் வந்து அதிரடியாக 53 பந்தில் 82 ரன்கள் ஜேக்கப் பெத்தேல் எடுத்தார். மேலும் இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : வாட்டர் பாய்.. அறிமுக இளம் வீரர் முஷீர் கானை.. ஸ்லெட்ஜிங் செய்தாரா விராட் கோலி – பரவும் கண்டனங்கள்.. என்ன நடந்தது?
இது குறித்து ஜேக்கப் பெத்தேல் பேசும் பொழுது “விராட் கோலி ஆர்சிபி அணியில் நிறைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஐபிஎல் தொடருக்கு முன்பு இருந்ததைவிட தற்போது இரண்டு மாதங்கள் கழித்து நான் மிகவும் நல்ல பேட்ஸ்மேனாக என்னை உணர்கிறேன். இது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






