“உணர்ச்சிவசமா இருக்கு.. ராகுல் அவுட் ஆனதும் திலக்கிட்ட சொல்லிட்டேன்..!” – சதம் அடித்த சஞ்சு சாம்சன்!

0
8039
Sanju

இந்திய கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை யாருக்கும் புரியாதது. அவரைப் பற்றி யார் சொன்னாலும்திறமையாளர் என்று சொல்வார்கள், ஆனால் வாய்ப்புகள் மட்டும் ஒருமுறை கிடைப்பதே அரிது.

இவருக்கு முதல்முறையாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய டி20 அணியில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அவர் மொத்தமாக எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னும் கூட, இன்னும் முழுமையாக இந்தியாவுக்காக அவர் 40 போட்டிகள் விளையாடி விடவில்லை.

- Advertisement -

இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், ஒருநாள் கிரிக்கெட்டில் சூரிய குமாரை விட நல்ல சராசரி வைத்திருந்தும் கூட, அவர் இந்திய தேர்வுக்குழுவால் புறக்கணிக்கப்பட்டு, சூரியகுமாரே விளையாடினார்.

இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பொழுது, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் வாய்ப்பு கொடுத்தது. அதுவே முன்பு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் இருந்த பொழுது, டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுத்தது. அருகில் இருக்கும் உலகக் கோப்பையை மனதில் வைத்து இவரை நம்பிக்கையான வீரராக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்க்கவில்லை.

இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. இரண்டாவது போட்டியில் சொற்பரன்னில் வெளியேற, அது பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் தான் மூன்றாவது போட்டியில் பேட்டிங் செய்ய கடினமான மெதுவான ஆடுகளத்தில், மிகச் சிறப்பாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். இன்று அவர் 114 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்தார். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

சதம் அடித்ததற்கு பிறகு பேசிய சஞ்சு சாம்சன் “இப்பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக இருக்கிறேன். தற்பொழுது இதைக் கடந்து செல்கிறேன். இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம்.

புதிய பந்தில் அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். மேலும் பழைய பந்தில் பேட்டிங் செய்ய கடினமாகவும் ஆடுகளம் மெதுவாகவும் இருந்தது. கே எல் ராகுல் ஆட்டம் இழந்ததும், கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் சிறப்பாக இருந்ததும், ஆட்டம் அவர்கள் பக்கம் சென்று இருந்தது.

இதனால் நான் திலக் வர்மாவிடம் அந்த இடத்தில் பொறுமையாக விளையாடி, கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் இன்று இருப்பதால், 40 ஓவர்களுக்கு மேல் அடித்து விளையாடலாம் என்று கூறி முடிவு செய்தோம்!” என்று கூறியிருக்கிறார்!