இன்று புனே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் போட்டியில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்று அரையிறுதி வாய்ப்பை இலங்கை சிக்கலாக்கி இருக்கிறது!
இன்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, கேப்டன் குஷால் மெண்டிஸ் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சதிரா சமரவிக்ரமா இருவரது விக்கட்டையும் அடுத்தடுத்து இழந்தது பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.
இதன் காரணமாக சவால் அளிக்கும் ஸ்கோரை இலங்கை அணியால் பெற முடியவில்லை. 50 ஓவர்கள் முழுமையாகவும் விளையாட முடியாமல் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரில் குர்பாஸ் விக்கெட்டை ரன் ஏதும் இல்லாமல் பெற்றது. ஆனால் இதற்கு மேல் இலங்கை பந்துவீச்சாளர்களால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்புகளை எடுத்ததும் உடைக்க முடியவில்லை.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி மிக எளிமையாக மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 45.2 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நீடிக்கிறது.
தோல்விக்கு பின் பேசிய இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் கூறும் பொழுது “நாங்கள் பேட்டிங்கில் போதுமான அளவு ரன்கள் கொண்டு வரவில்லை. 280 இல்லை 300 ரன் சரியானதாக இருந்திருக்கும்.
முதல் 10 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தனர். அதற்குப் பிறகு பனி கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. இதனால் எங்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதில் சிரமம் ஏற்பட்டது.
இன்று உண்மையில் பனி நிறைய இருந்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. பேட்டிங் செய்வது எளிதாக மாறிவிட்டது. மதுசங்கா 2 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தன்னுடைய பவுலிங் ஃபார்மை தொடர்வார் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்,