சீனாவில் இருக்கும் ஹாங்சோ நகரில் தற்போது 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. மேலும் ஆப்கானிஸ்தான் வெள்ளி பதக்கமும் பங்களாதேஷ் அணி வெண்கல பதக்கமும் வென்றன.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
தற்போது இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் பரீத் அகமத் தங்கப்பதக்கம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பேக் அப் வீரராக இந்தியா வந்திருக்கும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது இதனை தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய பரீத் அகமத் ஆசிய கோப்பை போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட விதி வினோதமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். போட்டி மழையால் கைவிடப்பட்டால் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது போல் பதக்கமும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு தங்கம் வழங்கப்பட்டிருக்கிறது. இது வினோதமாக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.
சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியது ஒரு புதுமையான அனுபவம் எனக் கூறிய பரீத் அகமத் சீனாவில் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடியது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். சிறிய மைதானங்கள் மற்றும் சீனாவில் இருந்த ரசிகர்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தனர் எனவும் கூறினார். அவர்கள் ஒரு ரன் மற்றும் ஒரு விக்கெட் என அனைத்தையும் ரசித்து கொண்டாடினார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் .
முன்னதாக இந்தியா ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கால் இறுதிப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்றன. இந்த அணிகள் தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுடன் மோதி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி 50 ரன்கள் 5 விக்கெட் இழந்தாலும் சிறப்பாக விளையாடி 112 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று டெல்லியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.






