அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு பெரிய மாற்றம் வர இருக்கிறது.
தற்போது ஆசியாவில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஐசிசி தொடர்களில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய அணியாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. அவர்களுடைய இந்த குறுகிய கால வளர்ச்சி மற்றும் எழுச்சி உலக கிரிக்கெட் க்கு நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். ஒரு போட்டியில் வெற்றி பெற்று கொண்டாடுவதை விட்டு, ஒரு தொடரை வென்று கொண்டாட வேண்டும் என்ற மனநிலையை ஆப்கானிஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. இதற்கு அடுத்து 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது. நடுவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களையும் வென்றது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜோனதன் டிராட் வெளியேறுகிறார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது. இதை ஜோனதன் டிராட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : சக்தே இந்தியா ஷாருக்கான்தான் இந்த மசூம்தார்.. டிராவிட்டுக்கு நடந்த அதே நடந்தது – அஸ்வின் பாராட்டு
இந்த முடிவு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை மேலும் தொலைநோக்காக எடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தகவல் தொடர்பில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்தங்கி இருந்ததாக ஜோனதன் டிராட் கருத்து தெரிவித்த சில மாதங்களில் இந்த முடிவை எடுக்கப்பட்டது சில யூகங்களை கிளப்பியும் இருக்கிறது. அதே சமயத்தில் இது இருதரப்பிலும் சுமூகமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கூறப்படுகிறது. ஆனால் ஜோனதன் டிராட் இடத்தை நிரப்ப ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எந்த வெளிநாட்டு வீரர் செல்வார் என்பதுதான் தற்பொழுது பிரச்சினையாக மாறி உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.