தற்போதைய இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில்லுக்கு முன்பாக, மிகவும் நம்பிக்கை வைத்து பார்க்கப்பட்ட வீரர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பராக இருக்கின்ற காரணத்தினால் எதிர்காலத்தில், மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக 2022 டிசம்பர் ஒரு மிகப்பெரிய காலை விபத்தில் சிக்கினார். மிக மோசமான காயம் அடைந்து, சிலரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது முழங்காலில் மூன்று முக்கியமான தசைநார்கள் கிழிந்து இருந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் முழுவதும் தன்னுடைய மறுவாழ்வுக்காக ஒதுக்கி தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் பயிற்சி செய்யக்கூடிய சில வீடியோக்கள் வெளிவந்தன. மேலும் ஐபிஎல் தொடர் டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொண்டார். டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சி குழுவில் உள்ளவர்கள் ரிஷப் பண்ட் அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் விளையாடுவார் என்று கூறினார்கள்.
மேலும் சில நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே செய்வார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்யாமல் கேப்டனாக மட்டுமே தொடர்வார் என்றும் பல்வேறாக கூறப்பட்டது.
அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ரிஷப் பண்டே தான் அடுத்த வருடம் விளையாடுவேனா? இல்லையா? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “சில மாதங்களுக்கு முன்பு இருந்ததற்கு இப்பொழுது சிறப்பாக இருக்கிறது. 100% சரியானதை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் நான் அதை எட்டிப் பிடித்து விடுவேன். அங்கிருந்துதான் தெரிய வரும்.
நான் திரும்பி வருவது குறித்து காட்டப்படும் எதிர்பார்ப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் விளையாடும் பொழுது மக்கள் நம்மை நேசிப்பது கிடையாது. நம்மைச் சுற்றி நிறைய அழுத்தம் இருக்கிறது.
இது மிகவும் கடினமான ஒரு நேரம். ஆனால் குறைந்தபட்சம் மக்கள் என்னை நேசிக்கிறார்கள் மற்றும் மதிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அவர்கள் என் மீது காட்டிய அளவில்லாத அக்கறையையும் புரிந்து கொண்டேன்!” என்று கூறி இருக்கிறார்!