மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் தன் அணியின் வீரரான ஷஷான்க் சிங்கை திட்டியது சரிதான் என இர்பான் பதான் தோனியை உதாரணம் காட்டி கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது மிக முக்கியமான நேரத்தில் மிகவும் அலட்சியமாக ஓடி ஷ்ஷான்க் சிங் ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக போட்டி முடிந்ததும் நடு மைதானத்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் அவரை திட்டியது வீடியோவில் தெளிவாக தெரிந்தது.
தோனியும் கோபப்படுவார்
இந்த நிலையில் சிலர் ஸ்ரேயாஸ் ஐயர் நடு மைதானத்தில் வைத்து தன்னுடைய வீரரை திட்டி இருக்கக் கூடாது என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக செய்தது சரியானது என இர்பான் பதான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அளவிற்கு கோபப்பட்டு இருக்கக் கூடாது என சிலர் சொல்கிறார்கள். நான் தோனி உடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவரை எல்லோரும் நிதானமானவர் அமைதியானவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவரும் பல வீரர்களை திட்டி இருக்கிறார். அதற்கான நேரம் வரும்போது ஒரு கேப்டனாக நீங்கள் திட்டவும் செய்ய வேண்டும்”
ஸ்ரேயாஸ் செய்தது சரிதான்
“இந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தது சரியா? நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக அவுட் ஆகும் பொழுது அது கேப்டனை எந்த விதத்திலும் கோபமடைய வைக்கவோ கவலையடைய வைக்கவோ செய்யாது. நீங்கள் அணிக்காக சிக்ஸர் அடிக்க ஏதாவது முயற்சி செய்து ஆட்டம் இழந்தால் அதில் எந்த தவறும் கிடையாது”
இதையும் படிங்க : சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்கள்.. வினோத காரணத்தால் போட்டி தாமதம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆச்சரியம்
“ஆனால் வெற்றி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இப்படி அலட்சியமாக ரன் அவுட் ஆனால் அது அணியின் வெற்றியை பாதிக்கும். இதைத்தான் அந்த நேரத்தில் ஷஷான்க் சிங் செய்தார். அவர் சிறப்பான வீரர் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார். ஆனால் அந்த ரன் அவுட் அவர் மிகவும் அலட்சியமாக இருந்தார். இதனால்தான் ஸ்ரேயாஸ் ஐயர் கோபமடைந்தார். நான் அவருடன் முழுமையாக உடன்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






