நேற்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் திலக் வர்மா பற்றி அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, சிவம் துபே எப்படியான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார் என்பது குறித்து இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. ஆனாலும் அவருடைய பொறுப்பை எடுத்துக் கொண்டு சிவம் துபே பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் சமநிலையை தவறவிடாமல் காப்பாற்றினார்.
சிக்கலில் இருந்து மீட்டார்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “சிவம் துபே இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது. அது மிகவும் அற்புதமாக இருந்தது. அவர் சில முக்கியமான ஷாட்களை விளையாடினார். ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் அவர் அடித்த சிக்சர் மிகவும் முக்கியமானது. அவர் அதை அடித்திருக்காவிட்டால் கடைசி இரண்டு ஓவருக்கு 17 ரன்கள் என்று வந்திருக்காது. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கி இருக்கலாம்”
” வேறு எந்த அணியும் ஹர்திக் பாண்டியா போன்ற தங்களது அணியின் பிரிமியம் வீரரை இழந்தால் நிச்சயம் தோல்வியடையும். அப்படிப்பட்ட ஒரு வீரரின் ரோலில் விளையாடிய சிவம் துபேவுக்கு எவ்வளவு அழுத்தம் இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இரண்டு ஓவர்களை வீசியதோடு 12 ரன் மட்டுமே கொடுத்தார். இது போட்டியில் முக்கியமான ஒரு காரணியாக அமைந்தது”
பயிற்சியாளர் தேர்வாளர் அசத்தல்
“2018 ஆசியக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து விளையாட முடியாமல் போயிருக்கிறது. எனவே 3 ஆல்ரவுண்டர்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் சிவம் துபேவை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் கொண்டு வந்த விதம் பாராட்டுக்குரியது”
இதையும் படிங்க : இந்தியா அடுத்து ஆடும் 3 முக்கிய தொடர்கள்.. மூன்றே நாளில் ஆரம்பிக்கும் முதல் தொடர் – முழு விபரங்கள்
“திலக் மற்றும் சஞ்சு இடையிலான பார்ட்னர்ஷிப் முக்கியமானது. அதற்குப் பிறகு சிவம் துபே அந்த சிக்சர்களை அடித்த விதம் மிகவும் முக்கியமானது. இறுதிப்போட்டியில் விளையாடும் பீதி அவரிடம் இல்லை. ஆனால் போட்டி இரண்டு அணிகளின் பக்கமும் செல்லக்கூடிய கடினமான நிலையில்தான் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






