360‌ ரன்கள் இலக்கு ! அதிரடியாக ஆடிய அயர்லாந்து அணி கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி ! உடைந்து போன வீரர்கள்

0
404
Ireland lost by 1 run vs NZ

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியுடன் முடித்துக்கொண்டு, தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாட அயர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் டப்ளின் தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி தொடரில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், முதல் முறையாக ஒருநாள் போட்டி வரலாற்றில், கடைசி ஓவரில் 20 ரன்களை அடித்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி இருந்தது!

இந்த நிலையில் தொடரின் கடைசிப் போட்டி இன்று நடந்தது. டாஸில் வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 126 பந்துகளில் 115 ரன்களும், ஹென்றி நிகோலஸ் 54 பந்துகளில் 79 ரன்களும் குவிக்க, 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ரன்கள் குவித்தது!

இதையடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால்போர்னி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிலிரிங்கும், புதிய நட்சத்திர வீரர் ஹாரி டெக்டரும் நான்காவது விக்கெட்டுக்கு 179 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய பால் ஸ்டிரிலிங் 120 [103] சதம் அடித்தார். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய ஹாரி டெக்டரும் 108 [106] சதம் அடித்தார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய அயர்லாந்து அணி 40 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களும், 45 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களும், 49 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களும் எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருந்தது. ஆனால் கடைசி ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்து எட்டு ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், 9 விக்கெட்டுகளை இழந்து, கடைசி ஓவரில் 20 ரன்னை அடித்து நியூசிலாந்து அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் மட்டுமல்லாமல், தொடரையும் சிறு அதிர்ஷ்டம் இல்லாமல் அயர்லாந்து அணி இழந்திருக்கிறது. அடுத்து இருநாடுகளும் டி20 தொடரில் வரும் 18ஆம் தேதி மோதுகின்றன!