ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் 40 நாட்கள் தான் இருக்கின்றது. இந்த சூழலில் ஒவ்வொரு அணிகளும் கேப்டன்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அண்மையில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டும், பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் அனைவரின் கவனமும் தற்போது ஆர்சிபி மீது தான் திரும்பி இருக்கிறது. ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த டுப்ளசிஸ் தற்போது டெல்லி அணிக்கு சென்று விட்டார். இதனால் ஆர் சி பி அணியின் கேப்டன் யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
4 கேப்டன்கள் அணியில் இருக்கிறார்கள்:
ஆர் சி பி அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் திரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் சி பி அணியின் சிஒஒ ராஜேஷ்மேனன், “எங்கள் அணியில் நான்கு முதல் ஐந்து வீரர்கள் வரை கேப்டன்கள் வருவதற்கான தகுதிகள் உடையவர்களாக இருக்கிறார்கள்”.
“இன்னும் யாரை கேப்டனாக நியமிப்பது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. கேப்டன் தேர்வு செய்யும் விஷயத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம். இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும். எங்கள் அணியில் என்ன குறை இருந்ததோ அதை நாங்கள் மெகா ஏலம் மூலம் சரி செய்து விட்டோம்”.
பந்துவீச்சு படையை பலமாக்கி இருக்கிறோம்:
“எங்கள் அணியில் எந்த இடத்தில் எந்த வீரர்களை வைத்து நிரப்ப வேண்டும் என்பது குறித்து யோசித்து அதற்கான முடிவுகளை எடுத்து வைக்கும். இதேபோன்று பலமான இந்திய வீரர்களை வைத்து அணியை கட்டமைத்து இருக்கின்றோம்”.
“பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாடும் போது எந்த மாதிரியான பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து எல்லாம் முடிவு எடுத்து இருக்கின்றோம். நாங்கள் மெகா ஏலத்தில் முதல் நாள் பெரிய அளவில் வீரர்களை வாங்கவில்லை”.
“ஆனால் இரண்டாவது நாளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் ரசிகர்களை எங்களுடைய செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்கள். ஐபிஎல் மெகா ஏலத்திலே ஒரு சிறந்த அணியை நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம்” என்று ஆர் சி பி அணியின் சிஒஒ ராஜேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை 143 போட்டிகளில் ஆர் சி பி அணிக்காக விராட் கோலி கேப்டன் ஆக செயல்பட்டு இருக்கிறார். இதில் ஆர்சிபி அணி 48.5 சதவீதப் போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது.