ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், கொல்கத்தாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
முதல் இரண்டு போட்டிகளில் செய்த தவறை மும்பை அணி திருத்திக் கொண்டு மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடியது. இந்த நிலையில் மும்பை அணியில் நட்சத்திர வீரரான பும்ரா முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
நாளை விளையாடுவாரா பும்ரா?
ஆனால் பும்ரா மார்ச் மாதத்தில் நடைபெறும் போட்டிகள் மட்டும் தான் பங்கேற்க மாட்டார் என்றும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது. இந்த தருணத்தில் மும்பை அணியின் கூற்றுப்படி நாளை ஏப்ரல் நான்காம் தேதி நடைபெறும் போட்டியில் லக்னோவுக்கு எதிராக பும்ரா விளையாட வேண்டும்.
ஆனால் பிசிசிஐ மருத்துவ குழு பும்ரா குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் நாளை தொடங்கும் போட்டியில் பும்ரா இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதே சூழலில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்ய பிசிசிஐ மருத்துவக்குழு அனுமதி அளித்த நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் திரும்புகிறார்.
சாம்சனுக்கு ஒப்புதல், பும்ராவுக்கு இல்லை:
இது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை தரும். சாம்சனுக்கு ஒப்புதல் வழங்கிய மருத்துவக் குழு பும்ராவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் பும்ரா மேலும் சில காலம் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. ரிஷப் பண்டின் கிரிக்கெட் வாழ்க்கை அவர் நினைத்தது போல் செல்லவில்லை.. பியூஸ் சாவ்லா கருத்து
இதன் காரணமாக பும்ரா மேலும் சில போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என தெரிகிறது. அனைத்தும் சரியாக நடந்தால் மும்பை அணியின் பிற்பகுதியில் தான் பும்ரா அணிக்கு திரும்புவார் அதுவும் இல்லை என்றால் பும்ரா ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்பது சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.






