பொதுவாக கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் விளையாட்டு என்று கூறப்படுவது உண்டு. காரணம் 10 விக்கெட் மட்டுமே இருப்பதால், பந்து வீச்சுக்கு அதிக சாதகம் கொடுக்கப்பட்டால், போட்டியில் எந்த சுவாரசியமும் இருக்காது.
இந்த காரணத்தை வைத்துக் கொண்டு படிப்படியாக ரசிகர்களை கவர்வதற்காக முழுமையான பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக கிரிக்கெட் மாற்றப்பட்டு இருக்கிறது. சில பல நேரங்களில் பந்துவீச்சாளர்களால் எதையும் செய்ய முடியாத மிகவும் மோசமான தட்டையான ஆடுகளங்கள் கொடுக்கப்படுகின்றன.
இப்படியான ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஹீரோக்களாக வெளியே தெரிகிறார்கள். பந்துவீச்சாளர்கள் என்ன செய்தாலும் அவர்களது விக்கெட்டை எடுக்க முடியாது என்கின்ற நிலையில், ரன்களை வாரிக் கொடுத்துவிட்டு, ரசிகர்கள் முன்னிலையில் மிகவும் பரிதாபமாக வெளியேறுகிறார்கள்.
ஐசிசி போட்டிகளிலேயே இப்படியான தட்டையான ஆடுகளங்கள் நிறைய உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது, ஐபிஎல் தொடர் போன்ற தனியார் கிரிக்கெட் தொடர்களில் நிலைமை மோசமாகத்தான் இருந்து வருகிறது.
எனவே போட்டித் தன்மையை அதிகரிக்கும் விதமாக ஐபிஎல் தொடரில் கடந்த முறை இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் இரண்டு பிளேயிங் லெவலை டாசுக்கு முன்பாக கொடுப்பது என்பதெல்லாம் கொண்டுவரப்பட்டு, ஆட்டத்திற்குள் போட்டித் தன்மையை அதிகரித்தார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து வீசலாம் என்கின்ற நிலையில், இரண்டு பவுன்சர் பந்துகள் வீசலாம் என்று விதி மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த விதி அடுத்த வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடம் சையத் முஸ்டாக் அலி தொடரில் இந்த விதி பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விதி மாற்றம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் கூறும் பொழுது “ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் என்பது மிகவும் பயனுள்ளதாக நான் உணர்கிறேன். பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு சில சாதகங்களை வழங்கும் விதிகளில் இதுவும் ஒன்று.
ஏனென்றால் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் என்றால், நான் ஆரம்பத்திலேயே ஒரு பவுன்சர் வீசி விட்டால், அதற்கு மேல் பவுன்சர் வீசமாட்டேன் என்று பேட்ஸ்மேன் மிகவும் தயாராக இருப்பார். ஆனால் இப்பொழுது அப்படி இருக்க முடியாது. இந்த சிறிய மாற்றம் பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடியதாக அமையப்போகிறது!” என்று கூறியிருக்கிறார்!






