இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் வெற்றிகரமான டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு உலக கிரிக்கெட் நாடுகளின் வாரியங்கள் தங்களது வீரர்களை அனுப்பக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. கிரிக்கெட் என்று இல்லாமல் பொதுவாக விளையாட்டுகளுக்காக நடக்கும் தனிப்பட்ட தொடர்களில் மிகப்பெரிய தொடராக ஐபிஎல் மாறியிருக்கிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் அசைக்க முடியாத கிரிக்கெட் சக்தியாக மாறியிருக்கிறது.
பிசிசிஐ பின்பற்றும் விதிமுறை
பிசிசிஐ இந்திய வீரர்கள் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதோடு, ஐபிஎல் தொடரிலும் ஓய்வுபெற்ற பிறகே வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாட அனுமதிக்கிறது. இந்திய வீரர்கள் சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்று ஐபிஎல் போட்டியில் ஓய்வு பெறாவிட்டால் கூட அவர்களால் வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட முடியாது.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சரிந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இவ்வாறான திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அதே சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து ஐபிஎல் தொடருக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடருக்கு வீரர்களை அனுப்ப வேண்டாம்
இதுகுறித்து பேசி இருக்கும் இன்சமாம் உல் ஹக் கூறும்பொழுது “சாம்பியன்ஸ் டிராபியை விடுங்கள், உலகெங்கும் இருக்கும் சிறந்த வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு வந்து விளையாடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் இந்திய வீரர்கள் எந்த ஒரு லீக்குகளிலும் விளையாடுவது கிடையாது. எனவே உலகின் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களை அனுப்பாத பொழுது, மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் இல்லையா?!”
இதையும் படிங்க : இந்திய அணி ஒரே இடத்தில் ஆடட்டும்.. ஆனா நாங்களே ஜெயிப்போம் காரணம் இதுதான் – கிளன் பிலிப்ஸ் கருத்து
“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி எங்கும் நிலைத்து நிற்கவில்லை. ஒரு சிறிய அழுத்தத்தின்போது கூட ஒட்டுமொத்தமாக அணி சரிந்து விழுந்தது. மேலும் மற்ற அணிகளை எடுத்துக் கொள்ளும் பொழுது சுழல் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்த தொடர் முழுக்கவே ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளரை மட்டுமே கொண்டு வந்தது” என்று கூறி இருக்கிறார்






