ஐசிசி நடத்தும் தொடர்களை எப்படியாவது வென்றாக வேண்டும் என்பதே ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்நாள் கனவாகும். வரலாற்று சிறப்புமிக்க இத்தகைய தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதில்லை. 1975ஆம் ஆண்டு முதல் ஐசிசி உலக கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் பரிணாம வளர்ச்சியாக சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற நான்கு வகையான தொடர்கள் ஐசிசியால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தொகுப்பில் அதிகப்படியான ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளை வெல்ல தவறிய 6 அணிகளை பற்றி காண்போம்.
6. நியூசிலாந்து – 3
2015 உலக கோப்பை – 2019 உலகக்கோப்பை – 2009 சாம்பியன்ஸ் டிராபி
முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற நியூசிலாந்து அணி இதற்கு முன்னர் எந்த ஒரு ஐசிசி தொடர்களை வென்றதாக சரித்திரம் இல்லை. குறிப்பாக, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடர்களில் இருமுறையும் இறுதிப்போட்டி வரை தகுதிபெற்ற இந்த அணி தொடரை வெல்ல தவறியது. அதற்கு முன்பாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் கூட தொடரை வெல்ல தவறியது. எனவே, இம்முறை தனது ரசிகர்களை ஏமாற்றாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது.
5. வெஸ்ட் இண்டீஸ் – 3
1983 ஒரு நாள் உலகக்கோப்பை – 1998 சாம்பியன்ஸ் டிராபி – 2006 சாம்பியன்ஸ் டிராபி
1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதலிரு உலகக்கோப்பை தொடர்களையும் வென்று முத்திரை பதித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன் பின்னர் 25 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. இருப்பினும், டி20 போட்டிகளில் தனது அசாத்திய திறமையால் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இருமுறை டி20 உலகக்கோப்பை தொடர்களை வென்றுள்ளது. 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் உட்பட ஐசிசி நடத்திய உலகக்கோப்பை தொடர்களை 3 வெவ்வேறு இறுதிப்போட்டிகளில் தோற்று அந்தந்த குறிப்பிடத்தக்க தொடர்களை வெல்ல தவறியுள்ளது, வெஸ்ட் இண்டீஸ்.
4. ஆஸ்திரேலியா – 3
1975 ஒரு நாள் உலகக்கோப்பை – 1996 ஒரு நாள் உலகக்கோப்பை – 2010 டி20 உலகக்கோப்பை
தொடர்ந்து மூன்று முறை உலக கோப்பை தொடர்களில் வென்ற ஒரே அணியான ஆஸ்திரேலியா, மூன்று முறை ஐசிசி நடத்திய இறுதிப் போட்டிகளில் வெல்ல சோபித்துள்ளது. முதன்முறையாக நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெறத் தவறியது.
இருபது ஆண்டுகள் கழித்து 1996ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இறுதியாக, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் தோற்றுள்ளது. பல்வேறு வகையான உலகக்கோப்பை தொடர்களில் இந்த அணி வென்ற போதிலும் மூன்று முறை இறுதி போட்டிகளில் வெல்ல தவறியுள்ளது.
3. இலங்கை – 4
2007 ஒரு நாள் உலகக்கோப்பை – 2011 ஒரு நாள் உலகக்கோப்பை – 2009 டி20 உலகக்கோப்பை – 2012 டி20 உலகக்கோப்பை
2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சாம்பியனான இலங்கை அணி நான்கு முறை ஐசிசி நடத்திய உலக கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டி வரை தகுதிபெற்றுள்ளது. குறிப்பாக, 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து இரு முறை இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல தவறியது. அதேபோல் 2009 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர்களிலும் கூட இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்த அணி சோபிக்க தவறியது. குமார் சங்கக்கரா, மஹேலா ஜெயவர்தனே போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்ற போதும் திறமையான வீரர்களை கண்டெடுப்பதில் சிக்கல்களை சந்தித்து வரும் தற்போதைய இலங்கை அணி இனி உலக கோப்பை தொடரை வெல்வது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
2. இந்தியா – 5
2003 ஒருநாள் உலகக்கோப்பை – 2000 சம்பியன்ஸ் டிராபி – 2017 சம்பியன்ஸ் டிராபி – 2014 டி20 உலகக்கோப்பை – 2019 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
ஐசிசி நடத்திய தொடர்களில் அதிகப்படியாக இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்ற அணிகளின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, நேற்று நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று ரசிகர்களை ஏமாற்றியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும், 1983-இல் தனது முதலாவது உலகக்கோப்பை தாகத்தை தீர்த்த இந்திய அணி, அதன் பின்னர் மட்டுமே 8 இறுதிப் போட்டிகளில் முன்னேற தகுதி பெற்ற போதிலும் அவற்றின் 5-இல் சாம்பியன் பட்டம் வெல்ல தவறியுள்ளது.
1. இங்கிலாந்து – 6
1979 ஒருநாள் உலகக்கோப்பை – 1987 ஒருநாள் உலகக்கோப்பை – 1992 ஒருநாள் உலகக்கோப்பை – 2004 சாம்பியன்ஸ் டிராபி – 2013 சாம்பியன்ஸ் டிராபி – 2016 டி20 உலகக்கோப்பை
இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்து மோசமான சாதனையை புரிந்துள்ளது, இங்கிலாந்து. இறுதியாக நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதற்கு முன்னர், இங்கிலாந்து அணிக்கு எந்த ஒரு ஐசிசி தொடர்களை வென்றதாக சரித்திரம் இல்லை. கிரிக்கெட் போட்டியை தனது தேசிய விளையாட்டாக கொண்டுள்ள இங்கிலாந்து, இது போன்றதொரு மோசமான சாதனையை நிகழாமல் பார்த்துக் கொண்டாலே போதும் இந்த பட்டியலில் முதலாம் இடம் பிடிக்காமல் இருக்க.