INDvsSA.. மீண்டும் சுருண்டது தெ.ஆ.. ஜாகீர் கான் இஷாந்த் சாதனை.. பும்ரா மிரட்டல் பவுலிங்!

0
389
Bumrah

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளத்தில் நடைபெற்று விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, முகமது சிராஜ் 6 விக்கெட் கைப்பற்ற, மொத்தமாக 55 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி கடைசி ஆறு விக்கெட்டுகளை ரன் ஏதும் எடுக்காமல், 153 ரன்கள் மட்டுமே எடுத்து, 98 ரன்கள் முன்னிலையுடன் ஓரளவுக்கு தப்பித்துக் கொண்டது. ரபாடா, நிகிடி மற்றும் பர்கர் மூவரும் தென் ஆப்பிரிக்க தரப்பில் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

நேற்று முதல் நாளிலேயே ஆட்டத்தின் மூன்றாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய வந்தது. நேற்றைய நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்கா 62 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் இழந்து இருந்தது. நேற்றைய நாளில் மட்டும் மொத்தம் 23 விக்கெட்டுகள் விழுந்தது.

இன்று தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் அடித்து விளையாடுவது மட்டும்தான் சரியான முடிவாக இருக்கும். இதை உணர்ந்து மார்க்ரம் அதிரடியாக விளையாடி, 103 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்கள் மட்டும் எடுத்து மீண்டும் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அணி வெல்வதின் மூலம் தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் போட்டியில் இந்திய தரப்பில் பும்ரா அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட் கைப்பற்றினார். சவுத் ஆப்பிரிக்கா இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில், அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய டெஸ்ட் கிரிக்கெட் இந்திய பந்துவீச்சாளராக கபில்தேவ் ஏழு முறை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த வகையில் ஓய்வு பெற்ற ஜாகீர் கான் ஆறுமுறையும், அனில் கும்ப்ளே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் ஐந்து முறையும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். பும்ரா தற்போது இந்த நான்கு நாடுகளிலும் சேர்த்து ஆறு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். கபில் தேவுக்கு அடுத்த இடத்தில் தொடர்கிறார். பும்ரா இன்னும் குறிப்பிடத் தகுந்த சில ஆண்டுகள் விளையாடுவார் என்கின்றதால், கபில்தேவ் சாதனையும் முறியடிக்கப்பட வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.