இந்திய சுற்றுப்பயணத்தில் இரண்டு வெள்ளைப் பந்து தொடர்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், டிசம்பர் 26 ஆம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது.
டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இதுவரையில் இசான் கிஷான், முகமது சமி மற்றும் ருதுராஜ் மூவரும் விலகி இருக்கிறார்கள். தற்பொழுது இந்திய அணி இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்திய அணி இதுவரையில் தென் ஆப்பிரிக்காவில் எந்த டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை என்கின்ற மோசமான வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இந்த முறை அதை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.
தற்பொழுது இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 489 விக்கெட்டுகள் உடன் இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அவர் 500வது விக்கெட்டை கைப்பற்றுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இவருக்கு போட்டியாகக் கருதப்பட்ட நாதன் லயன் 500 விக்கெட்டுகள் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகமான ஒன்றுதான். தென் ஆப்பிரிக்காவில் சுழற் பந்துவீச்சாளர்களாகச் சாதித்தவர்களில் நாதன் லயன் மட்டுமே முக்கியமானவராக இருக்கிறார். டெஸ்டில் மற்ற எந்த பெரிய சுழற் பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தியது கிடையாது.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். எனவே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் என்று இந்திய அணி செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.
இந்த முறையும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு பெரிதாக கிடைக்காது என்று கருதப்படுகிறது. ஒருவேளை அப்படி கிடைக்காவிட்டால், இதற்கு அடுத்து உடனே இந்தியாவில் ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ரவிச்சந்திரன் அஸ்வின் நாதன் லயனை தாண்டுவாரென்று எதிர்பார்க்கலாம்!