இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வியடைந்து தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
தற்பொழுது ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு, இந்த வெற்றி மிக அவசியமானதாகவும் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் ரகானே இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய இடத்தில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் செய்ய இருவரும் விளையாடுகிறார்கள்.
இவர்களுக்கு நடுவில் இடம் பெற்றுள்ள கே.எல்.ராகுல் இடம் மிகவும் உறுதியானதாக இருக்கிறது. காயத்திலிருந்து திரும்பி வந்த அவருடைய ஆட்டம் யாரும் எதிர்பாராத அளவுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை அவரிடம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட்டை அதற்குரிய முறையில் அணுகும் பக்குவம் வெளிப்படவில்லை. அவர் திறமையானவராக இருந்தாலும் அணுகுமுறை தவறாக இருக்கிறது. ஆனால் இளம் வீரர் என்பதால் இவரை கைவிட ரோகித்-ட்ராவிட் தயங்குகிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் ஸ்ரேயா ஐயர் ஷார்ட் பந்துகளுக்கு மிகவும் பலவீனமானவராக இருக்கிறார். இப்படியான பந்துகளை எதிர்பார்த்து நின்று, பல்வேறு வகையான பந்துகளில் ஆட்டம் இழக்கிறார். அதே சமயத்தில் இவர் இந்திய சூழ்நிலையில் மிகவும் அவசியமான பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற காரணத்தினால் நிலையான புதிய டெஸ்ட் இந்திய அணியை உருவாக்குவதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது. மேலும் இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை பொறுத்தவரை ஐபிஎல் தொடரிலிருந்து எல்லா வடிவத்திற்கும் இளம் வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படியான வீரர்கள் கேமியோ இன்னிங்ஸ் ஆட மட்டுமே முடியும். நிலைத்து நின்று ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர்களாக வருவதற்கு பெரிய அனுபவம் தேவை. அதற்கு உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வளர்ப்பதே சரியான தீர்வு.
உள்நாட்டு அளவில் அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான், பிரியங் பன்சால் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கான வாய்ப்புகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று ஆதரவு குரல்கள் வெளியிலிருந்து தற்போது எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது!






