இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்த அடுத்த மூன்று நாட்களில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பித்தது.
இந்தத் தொடர் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறது என்பதை தாண்டி, இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இரண்டு அணிகள் மீண்டும் மோதிக் கொள்கின்றன என்பது ரசிகர்களுக்கு ஒரு சலிப்பை உருவாக்கியது என்பது உண்மை.
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் சில வீரர்களுக்கு அதைக் கொண்டாடுவதற்கு கூட நேரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் இந்தியாவிலேயே தங்கினார்கள். அதே சமயத்தில் இந்தியாவுக்கு சூரியகுமார் தவிர மற்றவர்கள் உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோல்வி அளித்த ஏமாற்றத்தினால் ஓய்வு தேவைப்பட்டது.
இருந்தாலும் கூட போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வரக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. மைதானங்கள் நிரம்புகின்றன. போட்டி தடை இல்லாமல் நடைபெறுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா தரப்பில் பெரிய வரவேற்பு கிடையாது. இன்னொரு பக்கத்தில் அவர்கள் ஏற்கனவே அறிவித்த அணியில் இருந்து கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஆறு வீரர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள மைக் ஹஸ்சி கூறும் பொழுது “இந்த டி20 தொடர் நிச்சயமாக மதிப்பிழந்து விட்டதாக நான் உணர்கிறேன். இது உலகக் கோப்பையின் மதிப்பை குறைக்காது. ஆனால் இந்த டி20 தொடரின் மதிப்பை குறைக்கிறது. உலகக் கோப்பையில் இருந்த பல வீரர்கள் தற்பொழுது நாடு திரும்பி விட்டார்கள். அவர்கள் டெஸ்ட் தொடர் விளையாடுவதற்காக ஓய்வில் இருக்கிறார்கள்.
சிறந்த இந்திய டி20 அணிக்கு எதிராக விளையாடுவதற்கான, சிறந்த டி20 ஆஸ்திரேலியா அணி நிச்சயமாக இது கிடையவே கிடையாது. இவ்வளவு கிரிக்கெட் விளையாடுவதற்கு என்ன மாதிரியான முன் தயாரிப்புகள் இருக்கிறதுஎன்று தெரியவில்லை. நடக்கும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும்.
ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மிகச்சிறந்த கிரிக்கெட் வடிவம் என்று நான் நினைக்கிறேன். விளையாடப்படும் நூறு ஓவர்கள் வீரர்கள் மேம்படுவதற்கு நிறைய உதவுகின்றன. கடந்த உலகக்கோப்பை விளையாட்டுக்கு ஒரு நல்ல விளம்பரமாக அமைந்தது என்பது உண்மை. இந்த உலகக் கோப்பைகள் நடந்த சில விஷயங்கள் 100 வருடங்களுக்கு பேசப்படும்!” என்று கூறி இருக்கிறார்!