தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. முதலில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அடுத்தடுத்து சதங்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கபெண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.
இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 127 பந்துகளில் 117 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. செபாலி வர்மா 38 பந்தில் 20 ரன்கள், ஹேமலதா நாற்பத்தி ஒரு பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இருவரும் ஜோடி சேர்ந்து, தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை மைதானத்தில் எல்லா பக்கத்திலும் விளாசி தள்ளினார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இந்த போட்டியிலும் அசத்தலாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 18 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 120 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 136 பந்துகளில் 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய கேப்டன் ஹர்மன்பிரித் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 88 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 325 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : காலையில மேட்ச்.. ஆனா இதை மறந்துட்டீங்களே.. ஆப்கான்கிட்ட சிக்கிடாதிங்க – இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா இந்திய பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். மேலும் அவருடைய தனிப்பட்ட அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ஸ்கோர் ஆகவும் இது பதிவாகி இருக்கிறது. மேலும் 7000 சர்வதேச ரன்களை கடந்த இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இத்தோடு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை சாதனையும் அவரிடம் வந்திருக்கிறது.