இந்திய அணி அபார வெற்றி ; அரை இறுதியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கிறது!

0
11799
ICT

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்று இருந்த இந்திய அணி, இன்று சம்பிரதாய போட்டி ஒன்றில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து மெல்போன் மைதானத்தில் விளையாடியது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அவர் வந்த வேகத்தில் வெளியேற அடுத்து கே எல் ராகுல் விராட் கோலி உடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கொண்டு வந்து அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 25 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக வந்த ரிஷப் பண்ட் 3 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.

ஹர்திக் பாண்டியா வந்து சூரியகுமார் யாதவ உடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆட, சூரியகுமார் வழக்கம்போல் 360 டிகிரியில் ஜிம்பாப்வே வந்துச்சாளர்களை வதைக்க ஆரம்பித்தார். அவரை ஜிம்பாப்வே அணியின் எந்த ஒரு பந்துவீச்சாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவரது அதிரடி வழக்கத்தை விட தூக்கலாகவே இருந்தது.

இறுதி வரை களத்தில் நின்ற சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 64 ரன்கள் 6 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் எடுத்து மிரட்டினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 186 ரன்கள் குவித்தது!

இதை எடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் பந்தலேயே தனது முதல் விக்கட்டை இழந்தது. இதற்கு அடுத்து சீரான இடைவெளியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்திக் கொண்டே இருக்க, 17.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 110 ரன்கள் அவுட் ஆனது. அந்த அணியின் ரியான் பர்ல் அதிகபட்சமாக 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சமி மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள். புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப், அக்சர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் இந்திய அணி 71 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணியை அடிலெய்டு மைதானத்தில் வருகின்ற வியாழக்கிழமை 10 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு எதிர்த்து விளையாட இருக்கிறது!