இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது.
இது சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
முதல் போட்டியில் தோல்வி
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள், அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவிக்க, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதற்குப் பிறகு நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 373 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பந்து வீச்சு மற்றும் குறிப்பாக ஃபீல்டிங் என அனைத்து விஷயங்களும் காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து பேசிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இது இளம் இந்திய அணி எனவும் அவர்களுக்கு தயாராக போதிய அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியம் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கௌதம் கம்பீர் கருத்து
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டியில் உலகின் சிறந்த பீல்டர்கள் கேட்ச்ளை தவற விட்டிருக்கிறார்கள். மேலும் எங்கள் பேட்டிங் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கிறது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது 600 ரன்கள் குவித்திருந்தால் அது எங்களுக்கு சாதகமான சூழ்நிலையாக இருந்திருக்கும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகும் நாம் நமது பந்துவீச்சாளர்களை கேள்வி கேட்க முடியாது. அவர்களை நாம் எப்படி மேம்படுத்துவது என்றால் அவர்களுக்கு போதிய ஆதரவை நாம் வழங்க வேண்டும். பந்துவீச்சாளர்களை நாம் உருவாக்க வேண்டும்.
இதையும் படிங்க:239 பந்து.. இங்கிலாந்தில் திலக் வர்மா மேஜிக் சதம்.. நான் டி20 பிளேயர் மட்டும் கிடையாது.. அதிரடி அறிவிப்பு
எங்கள் தோல்விக்கு தனி நபரை குற்றம் கூற முடியாது. ஒன்றாக விளையாடினோம் ஒன்றாக தோற்கிறோம், ஒன்றாக வெல்வோம். கேப்டன் குறித்து கூற வேண்டும் என்றால், முதல் டெஸ்ட் போட்டி எப்போதுமே பதட்டமானதாக இருக்கும். அவர் ஒரு அற்புதமான வீரர். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். எனவே நாம் அவருக்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டும்” என கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார். முதல் தோல்வியை கருத்தில் கொண்டு இனி அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.






