நேற்று இந்திய அணி ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பை தொடரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வென்றது. இருந்தபோதிலும் கோப்பை மற்றும் மேடலை இந்திய அணி வீரர்கள் வாங்க மறுத்து வெளியேறி விட்டார்கள்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நீண்ட நேரம் ஆகியும் பிரசன்டேஷன் நடைபெறாமல் தாமதப்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இழுபறியான நிலை
நேற்றைய போட்டியை இந்திய அணி வென்றதும் உடனடியாக பரிசளிப்பு விழா நடைபெறும் என ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தார்கள். ஆனால் வழக்கம் போல் பரிசளிப்பு விழா உடனே நடக்கவில்லை மிகவும் தாமதமானது. இதன் காரணமாக பலரும் மைதானத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.
பின்பு ஒரு வழியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு வந்த பாகிஸ்தான் அணிக்கான பரிசும், பாகிஸ்தான் வீரர்களுக்கான மெடலும் வழங்கப்பட்டது. மேலும் மதிப்பு மிக்க வீரர், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்திய அணி கோப்பையை பெற்றுக் கொள்ள வேண்டியது பாக்கி இருந்தது.
காரணம் என்ன?
இப்படியான நிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் ஆசியக் கோப்பை மற்றும் மெடலை வாங்க இந்திய அணி வராது என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி இவற்றை பெறாமல் அங்கிருந்து வெளியேறி சென்றது.
இதையும் படிங்க : 6 இன்னிங்ஸ்.. வெறும் 72 ரன்.. தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி
தற்போது ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் சேர்மேனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் மொஹ்சின் நக்வி இருக்கிறார். எனவே பாகிஸ்தானைச் சேர்ந்த அவரிடம் இருந்து கோப்பையையும் மெடலையும் பெற விரும்பாமல் இந்திய அணி புறக்கணித்து இருப்பதாக தற்போதைக்கு செய்திகள் தெரிவிக்கிறது.






