இந்திய கிரிக்கெட் வீரரான முகமது சமி தற்போது காயத்திலிருந்து குணமாகி சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க தயாராகி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ராவின் சர்ச்சையான கருத்துக்கள் குறித்து முகமது சமி தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் முகமது சமி அதற்குப் பிறகு எந்த சர்வதேச தொடர்களிலும் பங்கேற்கவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. அறுவை சிகிச்சை மேற்கொண்டு தீவிர ஓய்வு எடுத்து வந்த நிலையில் தற்போது குணமாகி இருக்கிறார்.
இனி முகமது சமி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா பணமும், புகழும் வந்தவுடன் விராட் கோலி மாறிவிட்டார் என்றும் அவருடன் தான் இப்போது பேசுவதில்லை என்றும் சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார்.
இதே நேரத்தில் ரோஹித் சர்மா எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கக் கூடியவர் என்றும், அவருடன் இன்று வரை நட்போடு இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த செய்திகள் ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய முகமது சமி ஊடகங்கள் ஒரு கருத்தை வெளியிடுவதற்கு முன்பாக அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்றும், அமித் மிஸ்ரா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருந்தார்.
இதுகுறித்து முகமது சாமி கூறும் பொழுது “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விராட் கோலிக்கு எதிராக ஏதாவது பேசினால், அடுத்த நாள் பத்திரிகைகளில் தங்களது பெயர் முதல் பக்கத்தில் வரும் என்பது நன்றாக தெரியும். எனவே அவர்கள் இது போன்ற செயல்களை வேண்டும் என்றே செய்கிறார்கள். அமித் மிஸ்ராவை பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை கண்டு நான் ஏமாற்றம் அடைகிறேன்.
இதையும் படிங்க:ஒவ்வொரு நாளும் தடையை தாண்டனும்.. எனக்கு16 வயசுல இருந்து இப்படித்தான் – ஹர்திக் பாண்டியா பேச்சு
எனவே ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பாக அதன் உண்மை தன்மையை முழுமையாக ஆராய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். என்னை பொறுத்தவரை ரோகித் மற்றும் விராட் கோலி இருவருமே சிறந்த நபர்கள். ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் என்னை எதிர்கொள்வதை வெறுக்கிறார். அதே நேரத்தில் விராட் கோலிக்கும், எனக்கும் வலையில் ஆரோக்கியமான சவால்கள் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






