பாகிஸ்தானின் உலகச் சாதனையை உடைத்து புதிய உலகச் சாதனை படைத்த இந்திய அணி!

0
4724
India

டி20 உலக சாம்பியனை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது. நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கிடைத்த 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, பாகிஸ்தானின் உலகச் சாதனையை உடைத்து இந்திய அணியை புதிய உலகச் சாதனை படைக்க வைத்திருக்கிறது.

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு தனது முன்னணி வீரர்களான டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் மிச்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் வந்திருந்தது. ஆனாலும் வந்திருந்த ஆஸ்திரேலிய அணி மிக பலமாகவே காணப்பட்டது.

- Advertisement -

நேற்று தொடரை யாருக்கு என்று தீர்மானிக்கும் தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி ஹைதராபாத் நகரில் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ரோகித் சர்மாவின் முடிவு தவறு என்பது போல் ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் அடித்து நொறுக்கி விட்டார். விளையாடியது இருபத்தி ஒரு பந்துகள் அத்தனை பந்துகளிலும் அவர் பந்தை அடிக்க மட்டுமே செய்தார். 19 பந்துகளில் இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் இன்னொரு இளம் வீரரான டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி சவாலான 186 ரன்களை குவித்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்த போதிலும், அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி சூர்யகுமார் யாதவ் இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை அனாயசமாக மோதி அற்புதமாக ஆடி ரன்களை கொண்டுவந்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரில் கொஞ்சம் பரபரப்பாக சென்றாலும் அதை சமாளித்து ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் நாயகனாக சூரியகுமார் யாதவும் இந்தத் தொடரின் நாயகனாக அக்சர் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்திய அணிக்கு நேற்று கிடைத்த இந்த வெற்றியின் மூலம் ஒரு புதிய டி20 உலகச் சாதனையும் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு இந்திய அணி 28 டி20 போட்டிகளில் பங்கேற்று அதில் 21 ஆட்டங்களில் வென்றிருக்கிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 20 ஆட்டங்களில் வென்று இருந்ததே ஒரு ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் வென்ற உலகச் சாதனையாக இருந்தது. தற்போது இதை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முறியடித்து இருக்கிறது.