இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் வெற்றிக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா வங்கதேசம் ஒருநாள் போட்டி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழக்க, அதற்குப் பிறகு ஹரிதாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 228 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஹரிதாய் 100 ரன்கள் குவித்து சதம் அடித்தார். ஜேக்கர் அலி 68 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா 41 ரன்கள் குவித்து வெளியேற, மறுமுனையில் துணை கேப்டன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 101 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் கேல் ராகுல் 41 ரன்கள் குவிக்க, இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இரவு உணவுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்
வெற்றிக்கான காரணம் குறித்து ரோஹித் சர்மா கூறும் போது “நீங்கள் எந்த ஒரு விளையாட்டையும் விளையாடுவதற்கு முன்பாக நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். வெற்றி இலக்கை துரத்தும் போது வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். நாங்கள் ஏற்கனவே அந்த சூழ்நிலையில் இருக்கிறோம். ட்ரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலை அமைதியாக வைத்திருக்க நிறைய அனுபவம் உள்ளது. கில் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அமைதியாக இருந்து சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். புல் இங்கு அதிகமாக இல்லாததால் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு எங்களை தகவமைத்துக் கொண்டோம் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க:101 ரன்.. கில் படைத்த மெகா சாதனை.. சமி அசத்தல் பவுலிங்.. சாம்பியன்ஸ் டிராபி.. 6 விக்கெட்டில் வங்கதேச அணியை வீழ்த்தியது
ஷமிக்கு இந்தப் போட்டி சிறப்பாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. நான் அவரின் கம்பேக்குக்காக நீண்ட காலம் காத்திருந்தேன். அவரின் தரம் என்னவென்பது தெரியும். அவர் நமக்காக என்ன செய்வார் என்பதும் நமக்குத் தெரியும். மேலும் பெரிய தருணங்களில் முன்னேறுவதற்கு அவரைப் போன்ற ஒருவர் நிச்சயம் தேவை. மேலும் கில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார், அவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறார். நாளை நான் அக்சார் பட்டேலை இரவு உணவுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அவரது ஹட்ரிக் விக்கெட் வாய்ப்பை மிஸ் செய்தேன். அது ஒரு எளிதான கேட்ச். அதைத் தவற விட்டதால்தான் வங்கதேச அணி பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. இந்த வெற்றியை மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






