இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்வதில்லையா? இது என்ன டி20 போட்டியா? – சரமாரியாக தாக்கிய பாகிஸ்தான் வீரர்!

0
164
ICT

கடந்த சில வருடங்களாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களுக்கு இடது கை வேகபந்துவீச்சாளர்கள் என்றாலே பெரிய சிரமமாக இருந்து வருகிறது!

பாகிஸ்தான் கடைசியாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பொழுது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்தது. அப்பொழுது பாகிஸ்தானின் இளம் வேகபந்துவீச்சாளராக வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைட் கான் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் பெரிய சிரமப்பட்டனர். அந்தத் தொடரில் சதம் உள்பட சிறப்பாக விளையாடியது மகேந்திர சிங் தோனி மட்டும்தான்.

- Advertisement -

இதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை பாகிஸ்தான் அணியிடம் இழந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விளங்கினார். அவரது துல்லியமான இன் ஸ்விங் பந்துவீச்சில் இந்தியா பேட்ஸ்மன்கள் நிலை தடுமாறி போனார்கள்.

இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதற்கு பாகிஸ்தான அணியின் இடது கை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு இடது கை வேகப் பந்துவீச்சாளர்களிடம் இருக்கும் பிரச்சனை தற்பொழுது வரை ஓயவில்லை. தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கிடம் சிக்கி இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கணேரியா பேசுகையில் ” இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை விளையாடுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். அவர்கள் ஏன் இந்த பிரச்சனைக்கு பயிற்சி செய்யவில்லை? கடந்த காலங்களில் பாகிஸ்தானின் முகமது ஆமீர் மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி அவர்களை எப்படி தொந்தரவு செய்தார்கள் என்று நாம் பார்த்தோம். தற்பொழுது ஸ்டார்க்கும் அதைச் செய்துள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பந்தை வெளியில் இருந்து உள்நோக்கி கொண்டு வருவது அவ்வளவு எளிதானது இல்லை!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்திய பேட்டர்கள் இந்த விஷயத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள். முந்தைய போட்டியிலும் அவர்கள் சரியாக செயல்படவில்லை. ராகுல் மற்றும் ஜடேஜா கடைசி நேரத்தில் விளையாடியதால் தப்பித்தார்கள். நேற்றைய போட்டியில் விராட் கோலி கொஞ்சம் நிற்காவிட்டால் இந்திய அணி 100 ரன்கள் அடிப்பதற்கு முன்பே சுருண்டு இருக்கும். ஆசியக் கோப்பையும் உலகக் கோப்பையும் நெருங்கி வருவதால் அவர்கள் இந்த விஷயத்தில் முன்னேற வேண்டும். அவர்கள் இதற்கு முன்பே இந்த விஷயத்தில் தீர்வு காணாமல் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அனைவரும் கடுமையாக அடிப்பதற்கே போனார்கள். இது என்ன டி20 போட்டியா? என்று கடுமையான கேள்வி எழுப்பி இருக்கிறார்!