“இந்தியாவுக்கு கபில்தேவ் பாண்டியா இனி கிடைக்க மாட்டாங்க.. காரணம் இந்த ஐபிஎல் விதிதான்!” – இந்திய முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

0
198
Hardik

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

ஐபிஎல் தொடரின் வருகைக்கு முன்பாக உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஐபிஎல் தொடரில் வீரர்கள் செயல்படுவதை பொருத்தே இந்திய அணிக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இடம் பெறாத வீரர்கள் இந்திய அணிக்குள் வர முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறியிருக்கிறது. இந்த போக்கின் காரணமாக பிரியங் பன்சால், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் இந்திய அணிக்குள் வர முடியாமல் இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடர் டி20 வடிவத்தில் நடைபெற்றாலும் கூட, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க முடியும் என்கின்ற அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரகானே சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடர் மிக முக்கிய ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு புகுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதி, எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கக் கூடியதாக அமையும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதியின் காரணமாக, ஆல் ரவுண்டர்கள் தேவை குறைகிறது. மேலும் பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பந்துவீச்சாளர்களாக பந்து வீசும் தேவையும் இல்லாமல் போகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் ஆல் ரவுண்டர்கள் வருவது நின்றுவிடும்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் வருவதற்கு முன்பாகவே இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லை என்கின்ற பெரிய குறை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமான ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி நீடித்தால், வீரர்கள் ஆல் ரவுண்டர்களாக உருவாவது தடுக்கப்படும். பெரும்பாலும் வீரர்கள் ஏதாவது ஒரு துறையை மட்டுமே தேர்ந்தெடுத்து உருவாவார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பது உறுதி!