இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி இறுதி வரையில் சிறப்பாக போராடி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இந்திய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்கள்.
நட்சத்திர வீரர்களின் நாள்
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு 109 பந்துகளில் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்து 120 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் கேப்டன் கேஎல்.ராகுல் 56 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.
இறுதி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் ரிக்கி ரிக்கல்டன் 0, குயிண்டன் டி காக் 0, கேப்டன் எய்டன் மார்க்ரம் 7 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த டோனி டி சோர்சி 39, டிவால்ட் பிரிவிஸ் 37 ரன்கள் எடுத்தார்கள்.
இதற்கு அடுத்து பிரிட்ஸ்கீ 80 பந்துகளில் 70 ரன்கள் எடுக்க, இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய மார்க்கோ யான்சன் அதிரடியாக 39 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்டம் தென் ஆப்பிரிக்க பக்கம் சென்றது. இந்த நிலையில் ஒரே ஓவரில் யாதவ் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் விராட் கோலி வருகிறாரா?.. பிசிசிஐ செயலாளர் வெளிப்படை பதில்
இந்த நிலையில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஸ் இந்திய ரசிகர்களுக்கு பயத்தை கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்தை அடித்த கார்பின் போஸ் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவரில் 332 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் 4 ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்திருக்கிறது.






