மரண பயத்தை காட்டிய ஸ்கீவர் ! விறுவிறுப்பான கடைசி 2 ஒவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி !

0
285
Ind W vs Eng W

காமன்வெல்த் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. டாப் 8 அணிகள் இரு குரூப்பில் பிரிக்கப்பட்டன். இந்திய மகளிர் அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணியுடனான முதல் போட்டியில் மட்டும் கடைசி சில ஓவர்களில் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. மற்ற இரு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து அணியை இந்திய வீராங்கனைகள் சந்தித்தனர். டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீட் கவுர் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். துவக்க வீராங்கனை ஸ்ம்ருதி மந்தனா அதிரடியாக ஆடி ஓவருக்கு குறைந்தது 2 பவுண்டரிகள் சேர்த்து 23 பந்தில் அரை சதம் விளாசினார். இந்திய மகளிர் அணி 7.5 ஓவரில் 76 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்த போது மற்றொரு ஒப்பனர் ஷெபாலி வர்மா 17 பந்தில் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். உடனே அடுத்த ஓவரில் 62 ரன்கள் எடுத்திருந்த மந்தனாவும் விக்கெட்டை பறிகொடுத்தார்.

- Advertisement -

பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீட் கவுர் 20 பந்தில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணியின் ரன் ரேட் குறைந்த வேளையில் ஜெமிமாவுடன் ஜோடி சேர்ந்த தீப்தி ஷர்மா இந்திய அணியை சிறப்பான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். ஜெமிமா 44 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். தன் பங்குக்கு தீப்தி ஷர்மா 20 முக்கிய ரன்கள் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் அடித்தது.

சற்று சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து துவக்க வீராங்கனைகள் களமிறங்கினர். இங்கிலாந்து அணி பவர்ப்பிளேவை மிகச் சிறப்பாக பயன்படுத்தினர். அதிரடியாக ஆரம்பித்த சோபியா டங்ளே அதை பெரிதாக மாற்ற தவறினார். 13 ரன்னில் ஆலிஸ் கேப்சே துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டேனியல் வியாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் கை ஓங்க ஆரம்பித்தது.

அடுத்து கேப்டன் ஸ்கீவருடன் ஜோன்ஸ் ஜோடி சேர இங்கிலாந்து அணி மெதுவாக வெற்றி பாதைக்கு திரும்பியது. ஆனால் அதை இந்திய ஸ்பின்னர் தீப்தி ஷர்மா தடுத்தார். ஜோன்ஸ் 31 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் மறு பக்கம் கேப்டன் ஸ்கீவர் மட்டும் நிலைத்து ஆடினார். கடைசி 2 ஓவரில் 27 ரன்கள் தேவை. பூஜா வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி விளாசி ஸ்கீவர் மரண பயத்தை காட்டினார். அடுத்த பந்தை கூடுதல் ரன்னுக்கு ஆசைப்பட்டு 41 ரன்னில் ரன் அவுட் ஆக இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது.

- Advertisement -

கடைசி ஓவரில் 14 ரன்களை கட்டுப்படுத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் தீப்தி ஷர்மா மற்றும் ஸ்னே ராணா மட்டுமே வெற்றிக்கு பெரிய காரணம். தீப்தி ஷர்மா 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மற்றொரு ஸ்பின்னர் ஸ்னே ராணா 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்த அரை இறுதியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இந்திய மகளிர் அணியை தங்க பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் சந்திக்கும்.