கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

சரியான ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய இந்தியா ; தொடரைக் கைப்பற்றுமா?

ஆஸ்திரேலியா அணியின் 2023 இந்தியச் சுற்றுப்பயணத்தில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசிப் போட்டி நடைபெற்று வருகிறது!

- Advertisement -

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இதற்கு அடுத்து மும்பையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்த நிலையில், தொடரை யாருக்கு என்று நிர்ணயிக்கும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்பொழுது நடந்து வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் வெளியில் அமர வைக்கப்பட்டு டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்டன் அகர் இருவரும் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் அணிக்குள் வர கொண்டுவரப்பட்டார்.

டேவிட் வார்னர் அணிக்குள் வந்தாலும் கடந்த ஆட்டங்களைப் போல டிராவீஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த ஆட்டங்களைப் போலவே இருவரும் அதிரடியில் ஈடுபட அவர்களின் ஆஸ்திரேலியா அணி விக்கெட்டை இழக்காமல் 50 ரன்கள் தாண்டி வெற்றிகரமாக பயணித்தது.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பதினோராவது ஓவருக்கு ஹர்திக் பாண்டியாவை அழைத்துப் பந்தை தர, இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் விக்கெட்டை ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு டபுள் செக் வைத்தார்.

மேற்கொண்டு பந்துவீச்சை தொடர்ந்த ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடி வந்த மிட்சல் மார்சை கிளீன் போல்ட் செய்தார். ஹெட் மற்றும் மார்ஷ் துவக்க ஜோடி முதல் விக்கட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. ஹெட் 33 ரன்களும், மார்ஷ் 47 ரன்களும் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து களம் கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சுமாராக தொடர்ச்சியாக ரன் பங்களிப்பை தந்தார்கள். டேவிட் வார்னர் 23, லபுஷேன் 28, அலக்ஸ் ஹேரி 38, மார்கஸ் ஸ்டாய்னிஷ் 25, சீன் அபாட் 26, ஆஸ்டன் அகர் 17 என சீரான ரன் பங்களிப்பை தந்தார்கள். ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டைகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் எட்டு ஓவர்கள் பந்துவீசி 44 ரன்கள் விட்டுத்தந்து மூன்று முக்கிய விக்கட்டுகளை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் செய்து 56 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தற்பொழுது போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்திற்கு ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ள இலக்கு, கூடவும் குறைவும் இல்லாத சரியான இலக்கு ஆகும். எனவே இதை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதி மிகவும் சவாலான ஒன்றாகவும், ரசிகர்களுக்கு சுவாரசியமான ஒன்றாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகளில் யார் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவார்கள் என்று பார்ப்போம்!

Published by