இந்தியா, பாகிஸ்தான் இருத்தரப்பு போட்டிக்கு தடை.. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதுமா? மத்திய அரசு விளக்கம்

0
66

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விளையாட்டு உறவுகள் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ளது.
இது குறித்து மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் ஈடுபடாது என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கும் பன்னாட்டு நிகழ்வுகளில் இந்திய அணிகள் பங்கேற்கும். ஆனால், பாகிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இருத்தரப்பு போட்டிக்கு தடை:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 14 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.போட்டி அட்டவணையின்படி, சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், குறைந்தபட்சம் மேலும் இரண்டு முறை மோத வாய்ப்பு உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பின் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இம்மாத இறுதியில் இந்தியாவில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்காததை அடுத்து வங்கதேச அணி விளையாடுகிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், “ஒருவருக்கொருவர் நாடுகளில் நடைபெறும் இருதரப்பு விளையாட்டு நிகழ்வுகள் குறித்து, இந்திய அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது.

- Advertisement -

வீரர்களின் நலன் முக்கியம்:

அதேபோல், பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ நடைபெறும் சர்வதேச மற்றும் பன்னாட்டு நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் நடைமுறைகளையும், நமது விளையாட்டு வீரர்களின் நலன்களையும் கருத்தில் கொள்கிறோம். சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு இந்தியா ஒரு நம்பகமான இடமாக உருவெடுத்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2025.. என் இந்திய பிளேயிங் XI இதுதான்.. நான் விரும்பினாலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது – ரகானே தேர்வு

.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2024-27 வரையில் உள்ள மீதமுள்ள அனைத்து ஐசிசி நிகழ்வுகளுக்கும் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஏற்பாட்டின்படி, இரு நாடுகளும் நடுநிலையான இடங்களில் மட்டுமே விளையாடும். இதன் முதல் எடுத்துக்காட்டாக, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனது போட்டிகளையும் இறுதிப் போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடியது போல், இனி வரும் தொடர்களும் நடத்தப்படும்.

- Advertisement -