நடைபெற்று வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறி வருகிறது!
இந்த இறுதிப்போட்டிக்கு ஒருவாரம் இருக்கும் பொழுதுதான் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்திய வீரர்கள் கலந்து கொண்டு வந்த ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறாத அணிகளில் இருந்த வீரர்கள் கொஞ்சம் முன்கூட்டியே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார்கள்.
ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய சென்னை மற்றும் குஜராத் அணிகளில் இருந்த ரகானே, கில் மற்றும் சமி மூவரும் மிகவும் தாமதமாகவே இங்கிலாந்துக்கு சென்றார்கள்.
மாறுபட்ட சூழ்நிலையைக் கொண்ட இங்கிலாந்தில் எந்த விதமான பயிற்சி போட்டிகளும் இல்லாமல் நேரடியாக இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.
ஆனால் பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று அந்தக் காலநிலைக்குத் தங்களை மாற்றிக் கொண்டார்கள். இதை இந்திய அணி வீரர்களால் செய்ய முடியவில்லை. காரணம் ஐபிஎல்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி காட்டமாகப் பேசி இருப்பதாவது ” நீங்கள் எதற்கு முன்னுரிமைத் தருகிறீர்கள் என்று முதலில் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் முன்னுரிமைத் தருவது இந்திய அணிக்கா? இல்லை ஐபிஎல் தொடருக்கா?
நீங்கள் ஐபிஎல் தொடருக்குத்தான் முன்னுரிமை தருவீர்கள் என்றால் நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மறந்துவிட வேண்டியதுதான்.
உங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தேவையென்றால், இந்தியாவில் இந்த விளையாட்டின் பாதுகாவலராக இருக்கும் பிசிசிஐ முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக சில சட்டங்கள் ஐபிஎல் தொடரில் இயற்றப்பட வேண்டும். இந்தச் சட்டங்களில் முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கின்ற வீரர்களுக்கு அணிகள் எவ்வளவு முதலீடு செய்ய வருகின்றன என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இதெல்லாம் மிகவும் முக்கியமானது. இதையெல்லாம் இந்த நாட்டின் கிரிக்கெட் பாதுகாவலர்களாக இருப்பவர்கள்தான் செய்யவேண்டும்!” என்று மிகக் காட்டமாகக் கூறியிருக்கிறார்.