இன்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் வீரர் கருண் நாயர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய ஏ அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இன்று இந்த தொடரின் முதல் போட்டி செயின்ட் லாரன்ஸ், கேன்டர்பரி மைதானத்தில் துவங்கியது.
ஏமாற்றம் தந்த துவக்க ஜோடி
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக நட்சத்திர இளம் வீரர் ஜெய்ஷ்வால் மற்றும், இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் களமிறங்கினார்கள்.
இந்த இருவரில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பெரிய அளவில் ஏமாற்றம் தரும் வகையில் விளையாடி 17 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உடன் 8 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடிய ஜெய்ஷ்வால் 55 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கருண் நாயர் – சர்பராஸ் கான் அசத்தல்
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் மிகப் பொறுமையாக விளையாடி தங்கள் இன்னிங்சை ஆரம்பித்தார்கள். முதல் செஷன் முடிவு வரை பொறுப்பாக விளையாடி முடித்தார்கள். இதற்கு அடுத்து இரண்டாவது செஷனில் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி காட்ட ஆரம்பித்தார்கள். இதில் இருவருமே அரைசதம் கடந்தார்கள்.
இந்த நிலையில் சர்பராஸ் கான் இந்தியாவில் விளையாடுவது போல அதிரடியின் வேகத்தை அதிகரித்தார். எனவே அவரே முதலில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய அவர் 119 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு சோக ஓய்வா?.. பும்ரா பேசிய பேச்சால் கலங்கிப்போன இந்திய ரசிகர்கள்
அதே சமயத்தில் கருண் நாயர் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்து தற்போது 161 பந்துகளில் 14 பவுண்டரிகள் உடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். இவருடன் துருவ் ஜுரல் இணைந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருக்கிறது.






