19 வயதுக்குட்பட்டவர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அண்டர் 19 மகளிர் அணி வீழ்த்தி இருக்கிறது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் குரூப் ஏ வில் இடம் பிடித்துள்ள அண்டர் 19 இந்திய மகளிர் அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அண்டர் 19 மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
44 ரன்னில் ஆல் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ்:
இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டிங்கில் தடுமாறியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனை ஆன அசபி காலண்டர் 12 ரன்களிலும், கேப்டன் சமரா ராமநாத் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன் பின் களமிறங்கிய நடுவரிசை பேட்டர்கள் பிரீயானா ஹரிச்சரன், ஜசாரா, நைஜானி ஆகியோர் டக் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர்.
அந்த அணியில் கெனிக்கா சாசர் என்ற வீராங்கனை மட்டும் 29 பந்துகளை எதிர் கொண்டு 15 ரன்கள் சேர்க்க மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேறினர்.
இதனால் வெறும் 13.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணி 44 ரன்களில் அனைத்து விக்கட்டுகளுமே இழந்தது.
இந்த அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அண்டர் 19 மகளிர் அணி சார்பாக பந்துவீச்சில் ஜோஷிதா, ஆயுசி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பருனிக்கா சிசோடியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
4.2 ஓவரில் முடிந்த போட்டி:
இதனை அடுத்து 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை திரிஷா நான்கு ரன்களில் வெளியேற காமினி 16 ரன்களும், சனிக்கா 18 ரன்களும் எடுக்க இந்திய மகளிர் அணி நான்கு புள்ளி இரண்டு ஓவர்களில் எல்லாம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் அண்டர் 19 இந்திய மகளிர் அணி 94 பந்துகள் எஞ்சிய நிலையில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகள் 8.64 என்ற ரன் ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை அணி இரண்டாவது இடத்திலும் மலேசிய அணி மூன்றாவது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.