இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் நீண்ட கால வாய்ப்பு வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அப்போது, இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த 12 மாதங்களில் ஷுப்மன் கில், கருண் நாயர், மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இந்த இடத்தில் விளையாடியுள்ளனர். இது குறித்து பேசிய அஜித் அகர்கர் “மூன்றாவது இடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு காரணம், நாங்கள் தேர்ந்தெடுத்த அணியின் கலவை. கீழ் வரிசையில் கூடுதல் ஆல்-ரவுண்டரை விளையாட வைத்ததால், அணியின் கலவையை மாற்றினோம்.”
“பின்னர், நிதிஷ் ரெட்டி சில டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றார். எனவே, அது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அந்த நேரத்தில் விரும்பும் கலவை மற்றும் சமநிலையைப் பொறுத்தது. ஆனால், எதிர்காலத்தைப் பொறுத்தவரை, சாய் சுதர்சன் மிகவும் திறமையான வீரர் என்பதை நாங்கள் அறிவோம். அவருக்கு இனி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட கால வாய்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம்,” என்று அகார்கர் கூறினார்.
சாய் சுதர்சன் 2025 ஆண்டு ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி, மூன்று போட்டிகளில் விளையாடி 140 ரன்கள் எடுத்தார், இதில் ஒரு அரைசதம் அடங்கும், அவரது சராசரி 23.33 ஆகும்.தொடர்ந்து பேசிய அகார்கர், “விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஓய்வு பெறும்போது, அவர்களது இடத்தை நிரப்புவது பெரிய சவாலாக இருக்கும். அஷ்வின் சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார், ஷமி நீண்ட காலமாக விளையாடவில்லை.”
“கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் அணியின் முக்கிய வீரர்களாக இருந்தனர்.ஆனால், இங்கிலாந்தில் இளம் வீரர்கள் பலர் மிகச் சிறப்பாக விளையாடினர். நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், பல நல்ல அம்சங்கள் இருந்தன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவர்களுக்கு தங்கள் கேரியரை உருவாக்க நேரம் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்.” என்றார்.
ஜஸ்பிரித் பும்ரா குறித்து பேசிய அகர்கர், “அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் விளையாடுவார். பயிற்சியாளருடன் இது பற்றி விவாதிக்கப்படுகிறது.”
இதையும் படிங்க: இனி யாருக்கும் 15, 20 டெஸ்ட் போட்டிகள் வாய்ப்பு தர முடியாது.. டியர் கிரிக்கெட் வீரருக்கு அஜித் அகார்கர் நேரடி கல்தா
“நிச்சயமாக அவருக்கு சிறந்ததை விரும்புகிறோம், ஆனால் அணியின் நலன் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். அவர் ஒரு அற்புதமான வீரர், எனவே அவரை முடிந்தவரை களத்தில் வைத்திருக்க விரும்புகிறோம்.ஆனால் வரவிருக்கும் பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு அவரை கவனமாக கையாள வேண்டும்.” பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 19.82 சராசரியுடன் 219 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் 15 ஐந்து விக்கெட் குவியல்கள் அடங்கும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 42.6 ஆகும்.