தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு துருவ் ஜூரல், ரிஷப் பண்ட்டுடன் போட்டியிட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜூரல் பேட்ஸ்மேனாக விளையாட முடியும் என்றும், அதனால் நிதீஷ் குமார் ரெட்டி தனது இடத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான இரு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட், நவம்பர் 14-ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா ஏ, தென்னாப்பிரிக்கா ஏ இடையிலான இரண்டாவது டெஸ்டில் ஜூரல் இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் சதமடித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. துருவ் ஜூரலும் ரிஷப் பண்டும் இருவரும் இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் விளையாடுவார். அவர் துணைக் கேப்டன். அதனால் அவர் விளையாடுவார். விளையாடியும் ஆக வேண்டும்.”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு திறமைசாலி. ஆனால் துருவ் ஜூரலையும் விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அணியில் ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். கேள்வி என்னவென்றால், மேலே சாய் சுதர்ஷனை நீக்குவீர்களா? அல்லது கீழே நிதீஷ் குமார் ரெட்டியை தியாகம் செய்வீர்களா?”
“சாய் சுதர்ஷன் நம்பர் 3-ல் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிதீஷ் குமார் ரெட்டியை இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை. அதனால் அவரை தியாகம் செய்து துருவ் ஜூரலை வைத்துக் கொள்ளலாம்” என்றும் அவர் கூறினார். துருவ் ஜூரல் நம்பர் 6-ல் பேட் செய்யலாம், அதன்பிறகு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், மூன்று சிறப்பு பந்துவீச்சாளர்கள் என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: 8 இன்னிங்ஸ் 4 சதம்.. துருவ் ஜுரல் கம்பீர் மேல் போட்ட பிரஷர்.. 2 இந்திய வீரர்களுக்கு தலைவலி – வெளியான தகவல்கள்
உத்தரப் பிரதேச விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜூரல், தேர்வுக்குழு, அணி நிர்வாகம் மற்றும் கேப்டனுக்கு அவரை தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாக ஆக்கிவிட்டார் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தினார். மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பதால் நித்திஷ் குமார் தேவை இல்லை என்றும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.