சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப் பரீட்சை நடத்துகிறது. துபாயில் தொடர்ந்து இந்திய அணி விளையாடுவது சாதகம் என்று பலரும் குற்றச்சாட்டி இருந்தாலும், ஒவ்வொரு ஆடுகளமும் ஒவ்வொரு மாதிரி செயல்படுவதால் இது எங்களுக்கு சாதகம் கிடையாது என்று கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்திருந்தார்.
இதற்கு காரணம் ஒரு ஆடுகளத்தில் பேட்டிங் செய்யவே கடினமாக இருக்கிறது. இன்னொரு ஆடுகளத்தில் பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. இதனால் ஆடுகளத்தை கணிக்கவே முடியாத நிலையில் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள்.
பாக். போட்டிக்கு பயன்படுத்திய பிட்ச்:
அரையிறுதியில் புதிய ஆடுகளம் தயாரிக்கப்பட்டு போட்டி அதில் நடத்தப்பட்ட நிலையில், இறுதி போட்டியில் எந்த ஆடுகளம் பயன்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடிய அதே ஆடுகளம் தான் தற்போது மீண்டும் இறுதிப் போட்டிக்கு வழங்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
அந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும்போது பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினார். அந்த ஆடுகளத்தில் மொத்தம் 26 ஓவர்களை இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் வீசினர். அதில் அக்சர் பட்டேல் 10 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதேபோன்று குல்தீப், 40 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா 40 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.
கோலி சதம் அடித்த அதே பிட்ச்:
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 241ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் சவுத் சக்கில் 62 ரன்கள் அடித்திருந்தார். இதே இந்திய அணியில் விராட் கோலி அபாரமாக விளையாடி 111 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 45 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:விராட் கோலி இல்ல.. பைனலில் இந்த இந்திய வீரர்தான் ஆட்டநாயகன்.. நியூசிக்கு ஒரு வாய்ப்பு – ரவி சாஸ்திரி கணிப்பு
பாகிஸ்தான் அணியில் அப்ரார் அகமத் மட்டும் பத்து ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். தற்போது இறுதிப் போட்டிக்கு அதே ஆடுகளம் தான் பயன்படுத்த போகிறது. இதேபோல்தான் ஆடுகளம் செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடுகளத்தில் தற்போது வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்பு இருக்கிறது என்பதால் இது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது.






