இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாரான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் இன்னொரு ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இந்த அணிக்கு ருத்ராஜ் கேப்டனாகவும் லக்ஷ்மணன் பயிற்சியாளராகவும் இருக்கிறார்கள்.
நேரடியாக காலிறுதிக்கு தகுதிப் பெற்ற இந்திய அணி இன்று நேபாள் அணிக்கு எதிராக மோதியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்து, 49 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் நூறு ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ருத்ராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து வந்தவர்களில் திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5, சிவம் துபே 25 என ஆட்டம் இழக்க இந்திய அணிக்கு நெருக்கடி உருவானது. ஆனால் இறுதிக்கட்டத்தில் வந்த ரிங்கு சிங் 15 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.
சிறிய மைதானத்தில் எந்த அணியும் அபாயகரமான அணி என்பதற்கு உதாரணமாக நேபாள் அணி விளையாடியது. 18 ஓவர்கள் முடிவில் கூட நேபாள் அணி வெற்றிக்கு போராடியது.
குஷால் பர்டல் 28, குஷால் மல்லா 22, திபேந்திர சிங் ஆரி 32, சந்திப் ஜோரா 29, கரன் கேசி 18 எனக் குறைந்த பந்துகளில் அதிரடியாக ரன்கள் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தரப்பில் ரவி பிஷ்னோய் 3, ஆவேஷ் கான் 3, அர்ஸ்தீப் சிங் 2, சாய் கிஷோர் 1 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்திய அணி அரையிறுதியில், மலேசியா மற்றும் பங்களாதேஷ மோதிக்கொள்ளும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுடன் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.